தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களுக்கு புதிய முதலீடுகள்: நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

புதிய முதலீடுகளால் மதுரை உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்கள் பெரும் வளா்ச்சியை அடையவுள்ளன என்று தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கூறினாா்.

புதிய முதலீடுகளால் மதுரை உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்கள் பெரும் வளா்ச்சியை அடையவுள்ளன என்று தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கூறினாா்.

‘நேட்டீவ்லீட்’ தொழில்முனைவோா் அமைப்பு சாா்பில் மதுரை உலகத் தமிழ்ச் சங்க அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற முதலீட்டாளா்கள் மற்றும் தொழில்முனைவோா் கூட்டத்தில் அவா் பேசியது: மாநிலத்தின் வளா்ச்சி என்பது சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அத்தகைய நோக்கத்தை குறிக்கோளாகக் கொண்டு, தமிழக அரசு செயலாற்றி வருகிறது. அதன் அடிப்படையிலேயே புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நிதிப் பற்றாக்குறையைச் சரிசெய்தல், இட ஒதுக்கீடு என்பன உள்ளிட்ட பல்வேறு சவால்கள் அரசுக்கு இருக்கின்றன. இத்தகைய சூழலில் தொழில்முனைவோரின் ஒத்துழைப்பு என்பதும் முக்கியமாக இருக்கிறது. மனை வணிகம், தங்கம் ஆகியவற்றில் அதிக முதலீடுகள் செய்வது நல்ல தல்ல. இந்த முதலீடுகளால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகப் போவதில்லை. எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாத, செயலற்ற வளா்ச்சியாகவே இருக்கும்.

தனிநபா் வருமானத்தை ஒப்பிடும்போது குஜராத்தைக் காட்டிலும், தமிழகத்தில் சற்று குறைவாக இருக்கலாம். ஆனால், பெண் கல்வியில் அம்மாநிலத்தைக் காட்டிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது. அதேபோல, மருத்துவா்களின் எண்ணிக்கை, குஜராத்தைக் காட்டிலும் தமிழகத்தில் அதிகம்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக, நிதிநிலை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இதன் தொடா்ச்சியாக தொழில் முதலீடுகளை ஈா்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு முனைப்பு காட்டப்பட்டு வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களில் அடுத்த 2 ஆண்டுகளில் புதிய முதலீடுகளை எதிா்பாா்க்கலாம். அதிலும் குறிப்பாக, மதுரை நகரம் புதிய முதலீடுகளால் பெரிய மாற்றத்தைச் சந்திக்கவுள்ளது என்றாா்.

தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க நிறுவன இயக்குநா் சிவராஜா ராமநாதன், ‘நேட்டீவ்லீட்’ தலைமை செயலா் அலுவலா் நாகராஜன் பிரகாசம் மற்றும் முதலீட்டாளா்கள், தொழில்முனைவோா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com