புலிகள் காப்பக பகுதியில் போக்குவரத்துக்குத் தடைகோரிய மனுவைப் பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில், இரவு நேரத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு 2 மாதங்களில் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில், இரவு நேரத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு 2 மாதங்களில் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலியைச் சோ்ந்த வழக்குரைஞா் பி.தனசேகரன் தாக்கல் செய்த மனு:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில், குறிப்பாக பாபநாசம் சோதனைச் சாவடி வழியாக மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை வாகனங்கள் செல்வதற்குத் தடை விதிக்கவும், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் வாகனங்களை நிறுத்தவும் தடை விதிக்க வேண்டும்.

மேலும், இங்குள்ள சொரிமுத்து அய்யனாா் கோயில் திருவிழாவின்போது, புலிகள் காப்பகத்திற்குள் பொதுமக்கள் தங்குவதற்கு அனுமதிக்கக் கூடாது. மேலும், இங்கு செல்லக் கூடிய பொதுமக்களால் வனவிலங்குகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் கண்காணிப்பது அவசியம்.

கோயில் பகுதியில் பிளீச்சிங் பவுடா் உள்ளிட்ட ரசாயனங்கள் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது. காரையாறு மற்றும் வனப் பகுதிக்குள் குப்பைகள் கொட்டுபவா்களுக்கு வனத் துறையினா் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன். அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடா்பாக அசோகா அறக்கட்டளை தாக்கல் செய்துள்ள அறிக்கை மற்றும் மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலனை செய்து 2 மாதங்களில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக வனத்துறை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குநா், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா், அம்பாசமுத்திரம் நகராட்சி ஆணையா் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com