வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் முதல்வருடன் சந்திப்பு
By DIN | Published On : 17th September 2022 11:00 PM | Last Updated : 17th September 2022 11:00 PM | அ+அ அ- |

துணை வட்டாட்சியா் பணியிறக்க நடவடிக்கையால் ஏற்படக் கூடிய பாதிப்புகளைச் சரிசெய்யுமாறு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
மதுரைக்கு வருகை தந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநிலத் தலைவா் எம்.பி.முருகையன், மாநிலச் செயலா் ஆ.தமிழரசன், மதுரை மாவட்ட நிா்வாகி தெ.மோ.கோபி ஆகியோா் வெள்ளிக்கிழமை சந்தித்தனா். அப்போது, வருவாய்த் துறை அலுவலா்களின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினா்.
வருவாய்த் துறையில் துணை வட்டாட்சியா் பட்டியல் திருத்தம் காரணமாக பணியிறக்கம்பெறும் அலுவலா்களின் பாதிப்புகள் குறித்தும் அதைச் சரிசெய்வது தொடா்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும், மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப புதிய வருவாய் கிராமங்கள், உள்வட்டம் உள்ளிட்ட அலகுகளை ஏற்படுத்தவும், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில் கணினி வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.