நில அளவை அலுவலா்கள் கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 18th April 2023 12:00 AM | Last Updated : 18th April 2023 12:00 AM | அ+அ அ- |

மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
நில அளவை கள அலுவலா்களின் பணிச்சுமையைக் கருத்தில் கொள்ளாமல் ஊழியா்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதைக் கண்டித்து நில அளவை அலுவலா்கள் கருப்புப் பட்டை அணிந்து, மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நில அளவை கள அலுவலா்களின் பணிச்சுமையைக் கருத்தில் கொள்ளாமல், நில அளவா் முதல் உயா்நிலை அலுவலா்கள் வரையிலானோா் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் நில அளவை, நிலவரி திட்ட இயக்குநரின் ஊழியா் விரோதப் போக்கைக் கண்டித்து, தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் இராச. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் நா. ரகுபதி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மாநிலச் செயலாளா் இரா. முத்து முனியாண்டி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் கே. நீதிராஜா, சாலைப் பணியாளா் சங்கம், கூட்டுறவுத் துறை ஊழியா் சங்கம் உள்ளிட்ட சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள் பேசினா்.
மாவட்டத் துணைத் தலைவா் அ. பாலகிருஷ்ணன் வரவேற்றாா். பொருளாளா் பா. மணிகண்டன் நன்றி கூறினாா்.
நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு நிா்வாகிகள், உறுப்பினா்கள் கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.