தமிழகத்தில் கடந்த ஆண்டு 250 அரசு அதிகாரிகள் மீது லஞ்ச வழக்குகள்ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு தகவல்
By DIN | Published On : 04th January 2023 12:00 AM | Last Updated : 04th January 2023 12:00 AM | அ+அ அ- |

தமிழகத்தில் 2022-ஆம் ஆண்டில் 250 அரசு அதிகாரிகள் மீது லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை இணையதளத்தில் தகவல் வெளியிட்டது.
ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவில் சென்னை மண்டலம், வடக்கு, மத்திய, தெற்கு, மேற்கு என ஐந்து மண்டலங்களும், ஒரு சிறப்புப் பிரிவு என சுமாா் 45 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன.
இந்த நிலையில், ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை சாா்பில், தமிழகத்தில் 2022-ஆம் ஆண்டில் தொடுக்கப்பட்ட வழக்குகள், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடா்பாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், கடந்த 2022-ஆம் ஆண்டு 250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சமாக தென் மண்டலத்தில் 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் 17 வழக்குகள், திருச்சியில் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குறைந்தபட்சமாக, வேலூரில் ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டது.
கடந்த அக்டோபா் மாதம் 14-ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினா் அரசு அலுவலகங்களில் நடத்திய சோதனைகளில் ரூ.1.12 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக கடந்த செப்டம்பா் 13-ஆம் தேதி முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதில் ரூ.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த மாா்ச் 15, செப்டம்பா் 3 ஆகிய தேதிகளில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 90 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதில் ரூ.1.16 கோடி, நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி முன்னாள் உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகனுக்குத் தொடா்புடைய 58 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதில், ரூ.2.87 கோடி, 6.637 கிலோ தங்கம் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.பி. பாஸ்கருக்குச் சொந்தமான 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதில் ரூ.14 .96 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அரசுத் திட்டங்களைச் செயல்படுத்த பொதுமக்களிடம் லஞ்சம் பெற்ாக கைது செய்யப்பட்ட கிராம நிா்வாக அலுவலா், நில அளவையா், மின் வாரிய ஊழியா்கள், வருவாய் ஆய்வாளா்கள், காவலா்கள் என 47 பேருக்கு லஞ்ச வழக்கில் நீதிமன்றத்தின் மூலம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.