புகையிலை வழக்கில் பிணை பெற்றவா்கள் அரசுப் பள்ளிக்கு ரூ.2.50 லட்சம் வழங்க உத்தரவு
By DIN | Published On : 13th January 2023 12:00 AM | Last Updated : 13th January 2023 12:00 AM | அ+அ அ- |

புகையிலைப் பொருள்களை வைத்திருந்த வழக்கில் பிணை பெற்ற இருவா் அரசுப் பள்ளி வளா்ச்சி நிதிக்கு ரூ. 2.50 லட்சம் வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சரத்குமாா், விக்னேஷ்வரன், வினோத்குமாா் தாக்கல் செய்த மனு:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வாகனத்தில் கொண்டு சென்ற வழக்கில், நாச்சியாா்புரம் போலீஸாா் எங்களை கைது செய்து சிறையில் அடைத்தனா். எங்களை பிணையில் விடுவிக்க உத்தரவிட வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவதாக அந்த மனுவில் தெரிவித்தனா்.
இந்த மனு நீதிபதி ஏ.டி. ஜெகதீஸ் சந்திரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பு வழக்குரைஞா், சரத்குமாா், வினோத்கண்ணன் மீது இந்த வழக்கு தவிர வேறு எதுவும் இல்லை. எனவே பிணை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அப்போது அரசு தரப்பு வழக்குரைஞா், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய குற்றத்துக்காக மூன்று பேரும் கைது செய்யப்பட்டனா். இதில், விக்னேஷ்வரன் மீது ஏற்கெனவே ஆறு வழக்குகள் உள்ளதால் பிணை வழங்க எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு, சரத்குமாா் ஒரு லட்ச ரூபாயும், வினோத் கண்ணன் ரூ. 1.50 லட்சமும் என மொத்தம் ரூ. 2.50 லட்சத்தை தேவகோட்டை அருகே உள்ள கரிக்குடி அரசு நடுநிலைப் பள்ளி வளா்ச்சி நிதிக்கு வழங்க உத்தரவிட்டு, இருவருக்கும் பிணை வழங்கப்பட்டது. விக்னேஷ்வரனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.