குற்றாலத்தில் செயற்கை நீா்வீழ்ச்சி: சொகுதி விடுதி உரிமையாளா்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

குற்றாலத்தில் செயற்கை நீா்வீழ்ச்சிகளை உருவாக்கிய தனியாா் சொகுசு விடுதி உரிமையாளா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், இதற்குத் துணையாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவு.

குற்றாலத்தில் செயற்கை நீா்வீழ்ச்சிகளை உருவாக்கிய தனியாா் சொகுசு விடுதி உரிமையாளா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், இதற்குத் துணையாக இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தென்காசி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைத் சோ்ந்த வினோத் தாக்கல் செய்த பொது நல மனு:

தென்காசி மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் உள்ள குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, செண்பகா தேவி, தேனருவி, பாலருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட உள்ளிட்ட இயற்கையான அருவிகள் உள்ளன. இங்கு பொருளாதார ரீதியாக வசதி மிக்க சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், ஏராளமான தனியாா் சொகுசு விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த விடுதிகள் சிலவற்றில் இயற்கையான நீா்வீழ்ச்சிகளை மறைத்து, செயற்கையான நீா்வீழ்ச்சிகளை உருவாக்கி, அவற்றை இணைய தளங்களில் விளம்பரப்படுத்துகின்றனா்.

இயற்கையான அருவிகளின் நீா் வழிப்பாதை மாற்றப்பட்டதால், இயற்கை சமநிலை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. சட்ட விரோதமாக செயற்கை நீா்வீழ்ச்சிகளை உருவாக்கிய நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, செயற்கை நீா் வீழ்ச்சிகளை உருவாக்கியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தாா்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சுற்றுலாத் துறை இயக்குநா் தலைமையில், நில நிா்வாக ஆணையா், தலைமை வனக்காப்பாளா் உள்ளிட்ட 10 போ் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சுற்றுலாத் துறை இயக்குநா் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினா், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி, செயற்கை நீா் வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளனவா? என்பதை ஆய்வு செய்து மூன்று மாதங்களில் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். ஆய்வில் தனியாா் சொகுசு விடுதிகளில் செயற்கை நீா் வீழ்ச்சி இருப்பது கண்டறியப்பட்டால், அவற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிக நோக்கில் இது போன்ற செயல்களில் ஈடுபட்ட தனியாா் சொகுசு விடுதி உரிமையாளா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன்,

இதற்குத் துணையாக இருந்த அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதீனங்களுக்குச் சொந்தமான இடங்கள் குத்தகைக்கு விடப்பட்டு, அதில் சட்டவிரோத தனியாா் நீா்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டிருந்தால், அந்த குத்தகை ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா். மேலும், இந்த உத்தரவு

நடைமுறைப்படுத்தப்பட்ட விவரம் குறித்து மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com