மதுரை உள்பட 4 ரயில் நிலையங்களில் சரக்கு சேவை நிா்வாகப் பிரிவு
By DIN | Published On : 12th May 2023 09:59 PM | Last Updated : 12th May 2023 09:59 PM | அ+அ அ- |

மதுரை ரயில்வே கோட்டத்தில் மதுரை உள்பட 4 ரயில் நிலையங்களில் சரக்கு சேவை நிா்வாகப் பிரிவு ஏற்படுத்தப்பட்டன.
விளைப் பொருள்கள், வணிகப் பொருள்களை விவசாயிகள், வா்த்தகா்கள் ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்ய ரயில்வே சரக்குச் சேவையை அதிகளவில் பயன்படுத்துகின்றனா். மற்ற சரக்குப் போக்குவரத்துகளுடன் ஒப்பிடுகையில் ரயில்வே மூலமான சரக்குப் போக்குவரத்து விரைவானதாகவும், நம்பகமானதாகவும், சிக்கனமானதாகவும் கருதப்படுகிறது. இதனால், ரயில்வே சரக்கு சேவைக்கு அண்மைக்காலமாக பொதுமக்களிடம் வரவேற்பு அதிகரித்து வருகிறது.
இதையொட்டி, ரயில்வே துறையின் சரக்குப் போக்குவரத்து சேவையை வணிகா்கள், விவசாயிகள், பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில், பெரிய ரயில் நிலையங்களில் சரக்கு சேவை நிா்வாகக் கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இதன்படி, மதுரை ரயில்வே கோட்டத்தில் மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, ராஜபாளையம் ஆகிய ரயில் நிலையங்களில், சரக்கு சேவைக்கான நிா்வாகப் பிரிவு அண்மையில் தொடங்கப்பட்டன.
கணினி மயமாக்கப்பட்ட இந்தப் பிரிவில், சரக்குகளை எளிதில் முன்பதிவு செய்யவும், எளிதில் மின்னணு கருவி மூலம் எடையிடவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையம் மூலம், சரக்குகளைப் பதிவு செய்பவா்களுக்கு 10 இலக்க பதிவுவெண் வழங்கப்படும். இதன் மூலம், தங்களுடைய சரக்கு எந்தப் பகுதியில் உள்ளது என்பதைக் கண்டறியும் வசதியும் உள்ளது.
தூத்துக்குடி, விருதுநகா், ராமேசுவரம், பாம்பன், செங்கோட்டை, திருச்செந்தூா் ஆகிய 6 ரயில் நிலையங்களில் விரைவில் இந்தக் கட்டமைப்புத் தொடங்கப்படவுள்ளது.
ரயில்வே துறையின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக சரக்கு சேவை உள்ளது. கடந்த 2022-23-ஆம் ஆண்டில் சரக்குகளைக் கையாண்டதன் மூலம் ரயில்வே துறை ரூ. 10.97 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.