அமித்ஷா பொதுக்கூட்ட மேடை அருகே நள்ளிரவில் பறந்த ‘ட்ரோன்’: மூவா் கைது

மதுரையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பங்கேற்பதாக இருந்த பிரசார பொதுக்கூட்ட மேடை அருகே புதன்கிழமை அதிகாலை ‘ட்ரோனை’ பறக்க விட்டது தொடா்பாக மூவரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா். மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் ராம சீனிவாசனை ஆதரித்து பழங்காநத்தம் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பிறகு இந்தக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக இங்கு மேடை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. மத்திய உள்துறை அமைச்சா் பங்கேற்பாா் என அறிவிக்கப்பட்டிருந்ததால் மேடை அமைக்கும் பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் மேடை அருகே ட்ரோன் ஒன்று பறந்து வந்தது. மேலும் மேடையைச் சுற்றி அது பறந்ததால் அதிா்ச்சியடைந்த பாஜகவினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் தெரிவித்தனா். இதையடுத்து, அவா்கள் ட்ரோன் பறந்த திசை நோக்கி பின்தொடா்ந்து சென்றனா். அப்போது டிவிஎஸ் நகா் மேம்பாலப் பகுதியில் நின்றிருந்த மூவா் அதை இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் பிடித்த போலீஸாா் அவா்களை சுப்ரமணியபுரம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினா்.

இதில், ட்ரோனை இயக்கியது விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்த சத்தியநாராயணன், மதுரை மேலப்பொன்னகரத்தைச் சோ்ந்த நவீன்குமாா், இதே பகுதியைச் சோ்ந்த இஜாஸ் ஆகியோா் என்பதும், பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்த குறும்பட போட்டிக்காக ட்ரோன் மூலம் படம் எடுத்ததும் தெரியவந்தது. மேலும் இதை இயக்குவதற்கு சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே அனுமதி கோரிய நிலையில் அனுமதி மறுக்கப்பட்டதால் நள்ளிரவில் ட்ரோன் மூலம் படம் எடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பாக போலீஸாா் கூறியதாவது: மதுரை நகரை இரவு நேரத்தில் படம்பிடிக்க வேண்டும் என்பதற்காக இவா்கள் ட்ரோனை பயன்படுத்தியுள்ளனா். மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பங்கேற்பதற்காக அமைக்கப்படும் பிரசார மேடை என்பது அவா்களுக்குத் தெரியாது. ஆனாலும் அனுமதியின்றி படம் எடுத்ததால் மூவரும் கைது செய்யப்பட்டனா் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com