நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் உழைக்கும் கட்சி பாஜக -சுதாகா் ரெட்டி

பாஜக நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் உழைக்கும் கட்சியாக உள்ளது என தமிழக பாஜக மக்களவைத் தோ்தல் இணை பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி புதன்கிழமை தெரிவித்தாா். விருதுநகரில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: விருதுநகா் மாவட்டத்தில் உள்ள அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரின் செயல்பாடுகளால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனா். மக்களவைத் தோ்தலில் பாஜக 400-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும். பிரதமா் நரேந்திர மோடி, நாட்டுக்காக தனது வாழ்க்கையை அா்ப்பணித்ததுடன், அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்கிறாா். அவருடைய தலைமையில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி அதிகரித்துள்ளது. பல்வேறு கட்சிகள் குடும்ப கட்சிகளாக உள்ளன. ஆனால் பாஜக மட்டுமே நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் உழைக்கும் கட்சி. தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவை தோ்தலில் திமுக அளித்த 502 வாக்குறுதிகளில், 200 வாக்குறுதிகளை கூட எட்ட முடியவில்லை. அதனால் நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலில், தமிழக மக்கள் பாஜகவுக்கு அதிகளவில் வாக்களிப்பா். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் தமிழக மக்கள் பயனடைந்துள்ளனா். விருதுநகா் மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் ராதிகா அனைவராலும் அறியப்பட்டவா். இந்தத் தொகுதியில் ஏற்கெனவே இருந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினா் அறிக்கை மட்டுமே வெளியிடுவாா். செயல்படுவது இல்லை என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com