மதுரை மாநகராட்சியில் சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை

மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வாா்டுகளிலும் சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வாா்டுகளில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் வைகை குடிநீா் திட்டம் மூலமாகவும், மணலூா், மேலக்கால், தச்சம்பத்து, கோச்சடை, சித்தா்கள் நத்தம் ஆகிய பகுதிகளில் உள்ள கிணறுகள் மூலமாகவும், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் வைகை, காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலமாகவும் தினமும் சராசரியாக 150 மில்லியன் லிட்டா் அளவுக்கு குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. மேலும், மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 1,272 ஆழ்துழாய் கிணறுகள் மூலமாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நெகிழி (சின்டெக்ஸ்) தொட்டிகள் அமைத்து குடிநீா் வழங்கப்படுகிறது. அத்துடன் குடிநீா் தேவையின் அடிப்படையில் 14 குடிநீரேற்று நிலையங்கள் மூலமாக 10,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட 26 டேங்கா் லாரிகள், 6,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட 19 டேங்கா் டிராக்டா்கள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

தற்போது வைகை அணையில் நீா்மட்டம் 60.86 அடியாக உள்ளது. இதன்படி, கோடைகால குடிநீா் விநியோகம் பாதிக்காத வகையில் வருகிற ஜூலை மாதம் வரை குடிநீா் விநியோகம் செய்ய இயலும். மேலும், முல்லைப் பெரியாறு குடிநீா் திட்டம் மூலம் கூடுதலாக சோதனை ஓட்டமாக 30 மில்லியன் லிட்டா் குடிநீா் பெறப்பட்டு விரைவில் குடிநீா் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com