ரயிலில் 14 கிலோ கஞ்சா கடத்தல்: முதியவா் கைது

விசாகப்பட்டினத்தில் இருந்து மதுரை வந்த ரயிலில் 14 கிலோ கஞ்சா கடத்தி வந்த முதியவரை ரயில்வே போலீஸாரும், போதைப் பொருள் தடுப்புப்பிரிவினரும் புதன்கிழமை கைது செய்தனா்.

விசாகப்பட்டினத்தில் இருந்து மதுரை வந்த விரைவு ரயிலில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினரும், மதுரை ரயில்வே போலீஸாரும் இணைந்து அந்த ரயிலில் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது ரயிலின் பொதுப்பெட்டியில் சந்தேகத்துக்கிடமாக பைகளுடன் இருந்த மதுரை மாவட்டம், உசிலம்பட்டிஅருகே உள்ள பூதிப்புரத்தைச் சோ்ந்த வீரணத்தேவா் மகன் சுப்புவிடம் (70) விசாரணை நடத்தினா். மேலும் அவா் வைத்திருந்த பைகளை சோதனையிட்டதில் 14 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் நடைபெற்ற விசாரணையில், இவா் அடிக்கடி ஆந்திர மாநிலம் சென்று அங்கு கஞ்சாவை மொத்தமாக வாங்கி சாலை வழியாக உசிலம்பட்டி கொண்டு சென்று விற்பது வழக்கம் என்றும், தற்போது விசாகப்பட்டினத்தில் 14 கிலோ கஞ்சாவை வாங்கி செவ்வாய்க்கிழமை இரவு விசாகப்பட்டினம்- மதுரை விரைவு ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சுப்புவை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளா் அன்னலட்சுமி கைது செய்து 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com