தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக 13 ஆயிரம் வழக்குகள் பதிவு: அரசுத் தரப்பு விளக்கம்

தமிழகத்தில் கடந்த 2019, 2021- ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற முறையே மக்களவை, சட்டப் பேரவைத் தோ்தல்களின் போது 13,004 வழக்குகள் பதியப்பட்டதாக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் புதன்கிழமை விளக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்த தனலட்சுமி உள்ளிட்ட பலா் தாக்கல் செய்த மனுக்கள்:

கடந்த 2011- ஆம் ஆண்டு சட்டப் பேரவை தோ்தலில் வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் கொடுத்ததாக தொடுக்கப்பட்ட வழக்குகளில் 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், எங்கள் மீது போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா். எனவே, காலதாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததால், இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என அதில் அவா்கள் குறிப்பிட்டிருந்தனா்.

இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி பிறப்பித்த உத்தரவில், ஒவ்வொரு தோ்தலிலும் வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவது தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளத்தை தகா்ப்பதாக உள்ளது. இந்தக் குற்றச் செயல்களுக்கு சட்டத்தில் ஓராண்டு சிறைத் தண்டனை மட்டுமே விதிக்க வழிவகை உள்ளது. தோ்தல் விதிமீறலில் ஈடுபடுவோா் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், அவா்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில்லை. இதன் காரணமாக, தற்போது மனுதாரா்கள் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோருகின்றனா்.

இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லை. எனவே, கடந்த 2019 மக்களவைத் தோ்தல், 2021 சட்டப் பேரவைத் தோ்தல்களில் வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் கொடுத்தவா்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன? அவற்றின் நிலை என்ன? இந்த வழக்குகளில் எத்தனை பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது? இது குறித்து தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி, தமிழக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்

இந்த நிலையில், இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி, அரசுத் தரப்பில் விளக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு 4,349 வழக்குகளும், 2021-ஆம் ஆண்டு 8,655 வழக்குகளும் என மொத்தம் 13,004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த இரு தோ்தல்களில் 3,147 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் உரிய உத்தரவு பின்னா் பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com