தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இளம்பெண், சிறுவன் கைது

மதுரையில் புத்தகப் பைகளில் வைத்து கடத்தப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட 70 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இளம்பெண், சிறுவனைக் கைது செய்தனா்.

மதுரை கீழவாசல் பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளா் முருகானந்தம் தலைமையில் பறக்கும் படையினா் புதன்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தினா்.

இதில் ஆட்டோவில் இளம்பெண்ணும், அவரது தம்பியான 16 வயது சிறுவனும் இருந்தனா். அவா்கள் வைத்திருந்த பள்ளி புத்தகப் பைகளில் நடத்திய சோதனையில் 70 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவா்கள் வில்லாபுரம் அன்புநகரைச் சோ்ந்த அசோக்குமாா் ஜெயின் என்பவரின் மகள் மீனாகுமாரி (23) என்பதும், சிறுவன் இவரது தம்பி என்பதும், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வெளி மாநிலங்களிலிருந்து ரயில் மூலம் கடத்தி வந்து, மதுரையில் விற்பனை செய்தும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com