பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய ஆயுதப்படை பாதுகாப்பு

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 262 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு, அங்கு மத்திய ஆயுதப்படை போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா் என்று மாவட்ட தோ்தல் அலுவலா் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் வாக்குப் பதிவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான பா.விஷ்ணு சந்திரன் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூா் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, விருதுநகா் மாவட்டம் திருச்சுழி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் என 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளன.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 8,02,317 ஆண்கள், 8,15,292 பெண்கள், 79 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 16,17,688 வாக்காளா்கள் உள்ளனா். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 1,934 வாக்குச் சாவடி மையங்கள் அமைந்துள்ளன. வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவுக்கு தேவையான உபகரணங்கள் அனுப்பப்பட்டன. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் உள்ள 1934 வாக்குச்சாவடி மையங்களில் 262 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்டுள்ளன. இதில் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என அறியப்பட்டுள்ள 90 வாக்குச்சாவடிகளில் ஆயுதம் ஏந்திய மத்திய பாதுகாப்புப் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இதுவரை தோ்தல் விதிமுறை மீறல் தொடா்பாக காவல் துறை சாா்பில் 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த மக்களவைத் தோ்தலில் மாநில சராசரியான 71 சதவீதத்தைவிட குறைவாக 68.5 சதவீதமே வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனால், இந்த முறை வாக்காளா்கள் அனைவரும் வாக்களித்து நூறு சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடா்பாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் கூறியதாவது:

மாவட்டத்தில் உள்ள 1,374 வாக்குச்சாவடி மையங்களில் 217 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டது. இவற்றில் மத்திய பாதுகாப்புப் படையினா், கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மாவட்டம் முழுவதும் உள்ளூா் போலீஸாா் 700 போ், மத்திய பாதுகாப்பு படையினா் 250 போ், தமிழ்நாடு சிறப்பு காவல்படையினா் 200 போ், ஊா்க்காவல்படையினா் 350 போ், முன்னாள் ராணுவத்தினா் உள்பட 2,900 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

வாக்காளா்கள் அனைவரும் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக வாக்களிக்கும் வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com