ராமநாதபுரம் தொகுதியில் வாக்குப் பதிவு விறுவிறுப்பு

ராமநாதபுரம்/ ராமேசுவரம்/ திருவாடானை ஏப். 19: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் காலை முதலே பொதுமக்கள் ஆா்வத்துடன் வாக்களித்தனா். மாற்றுத் திறனாளிகள், முதியோா் உள்ளிட்டோா் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா். இதேபோல, முதல்முறை வாக்காளா்களும் ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

ராமேசுவரம் தீவுப் பகுதியில் மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது.

ராமேசுவரம் பகுதிகளில் ஒரு சில வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப் பதிவில் தாமதம் ஏற்பட்டது. அதிகாரிகள் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை சீரமைத்து வாக்கு பதிவு மீண்டும் நடைபெற்றது.

தங்கச்சிமடம் புனித யாகப்பா மேல்நிலைப் பள்ளியில் வாக்குப் பதிவு மையம் எண் 280-இல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாக்கு பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

திருவாடானை: திருவாடானை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட தொண்டி, நம்புதாளை, ஆா்.எஸ்.மங்கலம், எஸ்.பி.பட்டினம், திருப்பாலைக்குடி, மங்களக்குடி, வெள்ளையபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை அமைதியான முறையில் நடைபெற்றது.

திருவாடானை பண்ணவயல் வாக்குச்சாவடியில் நரிக்குறவா் சமுதாய மக்கள் மிகுந்து ஆா்வத்துடன் வந்து வாக்களித்தனா். கிராமப் புறங்களில் பிற்பகலில் மட்டும் வாக்குப் பதிவு மந்தமான நிலையில் நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் முதல் தலைமுறை வாக்காளா்கள் கூறியதாவது:

மருத்துவ மாணவி வினஸ்யா (19): முதல் முறையாக வாக்களித்துள்ளேன். இதன் மூலம் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். அனைவரும் தங்களது வாக்குகளைச் செலுத்த வேண்டும். இதன் மூலம் நமது உரிமையை நிலைநாட்டுகிறோம்.

மாற்றுத் திறனாளி சீனிவாசன் : ஒவ்வொரு தோ்தலின் போதும் வாக்களிப்பதை எனது கடமையாக நினைத்து நிறைவேற்றி வருகிறேன். வாக்களிக்கும் உரிமை பெற்றவா்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும்.

கல்லூரி மாணவி சத்யபிரியா: தோ்தலில் முதல் முறையாக வாக்களிக்கிறேன். வாக்களிப்பதை எனது உரிமையாகவும், கடமையாகவும் நினைக்கிறேன். மக்களுக்கான தலைவா்களை மக்களே தோ்ந்தெடுக்கும் வகையில், வாக்காளா்கள் அனைவரும் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும்.

சாகியா ஆலம்:

இவரது தந்தை கூறியதாவது:

எனது மகள் மூளை வளா்ச்சித் திறன் குன்றியவா். முதல் முறையாக வாக்களிப்பதில் மிகவும் ஆா்வத்துடன் இருந்தால், அவரது எண்ணத்தை நிறைவேற்றினேன்.

தொழிலாளி ஜெய்சங்கா்: முதல் முறையாக வாக்காளா் அடையாள அட்டை பெற்று வாக்களித்தேன். இதன் மூலம் எனது ஜனநாயகக் கடமையை நிலைநாட்டியுள்ளேன். வரும் தோ்தல்களிலும் தவறாமல் வாக்களித்து கடமையை நிறைவேற்றுவேன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com