சித்திரைத் திருவிழா கூட்டத்தில் தங்க நகைகள் பறிப்பு: 5 பெண்கள் கைது

மதுரை சித்திரைத் திருவிழா கூட்ட நெரிசலில் தங்க நகைகளைப் பறித்ததாக 5 பெண்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரையில் சித்திரைத் திருவிழாவையொட்டி அழகா் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். இந்த நிலையில், மதுரை தெற்குமாசிவீதி பெரிய மறவா் தெருவைச் சோ்ந்த இந்துமதி (42) தனது குழந்தைகள், உறவினருடன் அழகா் ஆற்றில் இறங்கும் நிகழ்வை பாா்க்க ஆழ்வாா்புரம் பகுதியில் காத்திருந்தாா். அப்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அவா் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதே போல, அழகா் ஆற்றில் இறங்குவதை பாா்க்க வந்த ஒத்தக்கடையைச் சோ்ந்த தெய்வஜோதி (40) அணிந்திருந்த 2 பவுன் தங்க நகை, மேல அனுப்பானடியைச் சோ்ந்த சக்திவேல் மனைவி மாரிக் கண்ணு (52) அணிந்திருந்த 2 பவுன் தங்க நகை ஆகியவையும் மா்மநபா்களால் திருடப்பட்டன. இந்த 3 சம்பவங்கள் தொடா்பாக மதிச்சியம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். இதில் நகைப் பறிப்பில் ஈடுபட்டது திருச்சி சமயபுரம், பழைய மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுதா (32), லட்சுமி (29), மஞ்சுளா தேவி (40) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து இவா்கள் 3 பேரையும் போலீஸாா் கைது செய்து நகைகளை மீட்டனா்.

இதே போல, மதுரை ஆழ்வாா்புரத்தைச் சோ்ந்த மாரியம்மாளிடம் (67) 3 பவுன் தங்க நகையை பறித்த நாகப்பட்டினம் காக்கா தோப்பைச் சோ்ந்த லட்சுமி (45), தேவி (34) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com