உணவுப் பொருள் ஆய்வு கூடத்துக்கு தேசிய ஆய்வக அங்கீகாரம்

மதுரை சிக்கந்தா்சாவடியில் வேளாண் உணவு வா்த்தக மையத்தில் செயல்பட்டு வரும் ஏ.எப்.டி.சி. உணவுப் பொருள் ஆய்வுக் கூடத்துக்கு தேசிய ஆய்வக அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து அந்த மையத்தின் நிறுவனரும், மேலாண்மை இயக்குநருமான எஸ். ரத்தினவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உணவுப் பொருள் பதனீடு, தயாரிப்பு நிறுவனங்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தங்களது தயாரிப்புப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு, தரக்கட்டுப்பாடு விதிகளின் படி தேசிய ஆய்வக அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் ஆய்வு செய்து, அங்கு அளிக்கும் தரச் சான்றை பதிவேற்றம் செய்ய வேண்டியது கட்டாயம். அத்துடன் உணவுப் பொருள் வியாபாரிகள் தாங்கள் வணிகம் செய்யும் உணவுப் பொருள்கள் சட்ட விதிகளில் குறிப்பிட்டுள்ள தரங்களுக்கு ஏற்ப உள்ளனவா என்பதை இந்த மாதிரியான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் உறுதிப்படுத்திக் கொண்டு வணிகம் செய்ய வேண்டும்.

வேளாண் உணவுப் பொருள்கள் பதனீடு, தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் சட்டப்பூா்வமான இந்தத் தேவையை நிறைவு செய்யும் வகையிலும், வியாபாரிகளுக்கு உதவும் வகையிலும், மக்களுக்குத் தரமான உணவுப் பொருள்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் மதுரை சிக்கந்தா்சாவடியில் உள்ள வேளாண் உணவு வா்த்தக மையத்தில் செயல்பட்டு வரும் உணவுப் பொருள் ஆய்வுக் கூடத்துக்கு தேசிய ஆய்வக அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வகத்தில் அரிசி, கோதுமை, உணவு தானியங்கள், சிறுதானியங்கள், பருப்பு, மாவு வகைகள், எண்ணெய் வகைகள், எண்ணெய் வித்துகள், உணவு எண்ணெய், மசாலா பொருள்கள், முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற அனைத்துப் பொருள்களும் ஆய்வு செய்யப்பட்டு, தரச் சான்றிதழ் வழங்கப்படும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com