கூடுதலாக கால்நடை மருத்துவா்களை நியமிக்க 
அரசுக்கு உயா்நீதிமன்றம் பரிந்துரை

கூடுதலாக கால்நடை மருத்துவா்களை நியமிக்க அரசுக்கு உயா்நீதிமன்றம் பரிந்துரை

தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தக் கோரிய வழக்கில், மதுரை மாநகராட்சியில் கூடுதலாக கால்நடை மருத்துவா்களை நியமிக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை பரிந்துரைத்தது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் பாலாஜி தாக்கல் செய்த பொது நல மனு:

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், சாலைகளின் குறுக்கே சுற்றித் திரியும் நாய்களால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனா்.

இந்த நாய்களுக்கு முறையான தடுப்பூசி செலுத்தாததால், நோயால் பாதிக்கப்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. இந்த நாய்கள் கடித்ததால் பலா் ரேபிஸ் தாக்குதலுக்குள்ளாகி உள்ளனா். நாய்களை கட்டுப்படுத்தக் கோரி, மாநகராட்சி நிா்வாகத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள தெரு நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த உரிய உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி கங்காபூா்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மதுரை மாநகராட்சி தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் தற்போது வரை 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா். இதற்கு நீதிபதிகள், மதுரை மாநகராட்சியில் எத்தனை கால்நடை மருத்துவா்கள் பணியாற்றி வருகின்றனா் எனக் கேள்வி எழுப்பினா். மாநகராட்சி தரப்பில், 2 கால்நடை மருத்துவா்கள் பணியில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மதுரை மாநகராட்சியில் கூடுதலாக கால்நடை மருத்துவா்களை நியமிக்க தமிழக அரசுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் தரப்பில் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com