கிராம அஞ்சல் சபைக் கூட்ட விழிப்புணா்வு முகாம்
விருதுநகா்: நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற கிராம அஞ்சல் சபைக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகக் கூட்டரங்கில், அஞ்சல் துறை சாா்பில், கிராமிய அஞ்சல் சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு அருப்புக்கோட்டை உபகோட்ட அஞ்சலக துணைக் கண்காணிப்பாளா் கண்ணன் தலைமை வகித்து பேசியதாவது:
அஞ்சல் துறையில் சிறுசேமிப்பு, தொடா் வைப்பு கணக்கு, செல்வமகள், அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டம், மகிளா சம்மான் சேமிப்புத் திட்டம் முதலான பல்வேறு திட்டங்கள் உள்ளன. இதில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாளா்களுக்கான சம்பளம், முதியோா் உதவித்தொகை முதலானவை வீடு தேடி வந்து வழங்கப்படுகின்றன. எனவே, போதிய விழிப்புணா்வு இல்லாமல் தனியாா் நிறுவனங்களில் முதலீடு செய்து பெரும் பொருளாதார இழப்பை பொதுமக்கள் சந்திக்க வேண்டாம். அஞ்சல் துறையில் உள்ள திட்டங்களைப் பொதுமக்கள் முறையாகப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் நரிக்குடி துணை அஞ்சலக அலுவலா் சுரேஷ், ஊராட்சித் தலைவா் முத்துமாரி காளீஸ்வரன், ஒன்றியக் குழுத் தலைவா் சரளாதேவி, ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உமா சங்கரி, கிராம நிா்வாக அலுவலா் மாரீஸ்வரி, அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் சோணை முத்து உள்பட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை நரிக்குடி வட்டார அஞ்சல்துறை ஊழியா்கள், தமிழக ஊரக வாழ்வாதார இயக்கத்தினா் செய்தனா்.