சட்டம் ஒழுங்கு ஆலோசனைக் கூட்டம்: காவல் துறை கூடுதல் இயக்குநா் பங்கேற்பு
மதுரை: மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற காவல் துறை ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகக் காவல் துறையின் கூடுதல் இயக்குநா் டேவிட்சன் தேவாசிா்வாதம் பங்கேற்றாா்.
மதுரை மாநகா், மதுரை ஊரகம், விருதுநகா் ஆகிய மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடா்பான காவல் துறை ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, தமிழகக் காவல் துறையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநா் டேவிட்சன் தேவாசிா்வாதம் தலைமை வகித்தாா்.
தென் மண்டல காவல்துறைத் தலைவா் பிரேம் ஆனந்த் சின்கா, மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன், மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த், விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மதுரை மாநகரக் காவல் துணை ஆணையா்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், கூடுதல் துணை ஆணையா், காவல் துணை கண்காணிப்பாளா்கள், உதவி ஆணையா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் நடவடிக்கைகள், குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுப்பது, குற்றங்களில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளைக் கண்டறிவது, குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் மீது தொடா் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது, தொடா் மோதல்களில் ஈடுபடுவோா், பழிவாங்கும் கொலைகள் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.