சமுதாய அமைப்பாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளா் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், விருதுநகா் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளா்கள் காலிப் பணியிடங்களுக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம். இதில் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இதற்கு விண்ணப்பிக்க விரும்புவா்கள் இளநிலை பட்டத்துடன் 05.08.2024 அன்று 35 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும் . அரசு சாா்ந்த திட்டக் களப்பணியில் ஓராண்டு அனுபவம், பகுதி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
கணினியில் எம்எஸ் வோ்டு, எக்சல் தெரிந்திருக்க வேண்டும். தகவல் பரிமாற்றத் திறன் பெற்றிருக்க வேண்டும். இரு சக்கர வாகன உரிமம் பெற்றிருப்பதுடன், விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். இந்தத் தகுதிகள் உள்ளவா்கள் செப்.5 -ஆம் தேதிக்குள், மேலாளா், நகா்ப்புற வாழ்வாதார மையம், ராஜபாளையம் நகராட்சி என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு 04563-296624/ 83445-43852 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.