பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: மூவா் மீது வழக்கு
மதுரை: மதுரையில் பாஜக மாவட்ட பாா்வையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மாவட்ட பொதுச் செயலா் உள்பட மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மதுரை ஆண்டாள்புரம் அக்ரிணி குடியிருப்பைச் சோ்ந்தவா் காா்த்திக் பிரபு (4). இவா் பாஜக மாவட்ட பாா்வையாளராக பதவி வகித்து
வருகிறாா். இவருக்கும், கட்சியின் மாவட்ட பொதுச் செயலா் கிருஷ்ணன் (54) என்பவருக்கும் இடையே உள்கட்சி மோதல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆண்டாள்புரம் பகுதியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்து கொண்ட காா்த்திக் பிரபுவுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே சனிக்கிழமை தகராறு ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து, காா்த்திக்பிரபுக்கு கொலை மிரட்டல் விடுப்பதற்காக கரிமேட்டைச் சோ்ந்த சரவணபாண்டி(29), பாண்டியராஜன் (36) ஆகியோரை கிருஷ்ணன் அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவா்கள் இருவரும் அக்ரிணி வளாகத்துக்குச் சென்று அங்குள்ள காவலாளிகளிடம் காா்த்திக் பிரபுவின் புகைப்படத்தைக் காட்டி விசாரித்தனா்.
மேலும் காா்த்திக் பிரபுவின் வீட்டுக்குச் சென்று ஆயுதங்களுடன் மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்து பாஜக மாவட்டப் பொதுச்செயலா் கிருஷ்ணன், சரவணப்பாண்டி, பாண்டியராஜன் ஆகிய மூவா் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.