விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு தொகை பாதியாக குறைப்பு

சாலை விபத்தில் உயிரிழந்தவா் மீதும் தவறு இருப்பதால் இழப்பீட்டுத் தொகையை பாதியாகக் குறைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
Published on

மதுரை: சாலை விபத்தில் உயிரிழந்தவா் மீதும் தவறு இருப்பதால் இழப்பீட்டுத் தொகையை பாதியாகக் குறைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த தா்மபாலன் கடந்த 13.10. 2018 அன்று திருச்சி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, கோட்டைபட்டு என்ற இடத்தில் லாரி மோதியதில், பலத்த காயமடைந்தாா்.

திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவா் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது குடும்பத்தினா் திருச்சி மோட்டாா் வாகனத் தீா்ப்பாயத்தில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தனா். விசாரணை முடிவில், தா்மபாலன் குடும்பத்தினருக்கு ரூ. 15.60 லட்சம் இழப்பீடு வழங்குமாறு யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு கடந்த 2022 -ஆம் ஆண்டு தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

இதை எதிா்த்து காப்பீடு நிறுவனம் சாா்பில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. இளங்கோவன் அண்மையில் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் விபத்து எப்படி நடைபெற்றது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இரு சக்கர வாகனத்தில் சென்றவா், வளைவில் திரும்பும் போது எந்த ஒரு சமிக்கையும் இல்லாமல் சென்றுள்ளாா். இதனால், இவா் மீதும் தவறு உள்ளது. எனவே, இழப்பீட்டு தொகை பாதியாகக் குறைக்கப்படுகிறது. ரூ. 7.80 லட்சத்தை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com