வேளாண் வருவாயை உயா்த்தும் உத்திகள் விளக்கக் கருத்தரங்கம்
மதுரை: மதுரை வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் வருவாயை உயா்த்துவதற்கான உத்திகள் விளக்கக் கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண்மை, ஊரக மேம்பாட்டு இயக்குநரகம், விரிவாக்கக் கல்வி இயக்குநரகம் ஆகியன இணைந்து அண்மையில் இந்தக் கருத்தரங்கை நடத்தின.
வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலைய முதன்மையா் பே.ப. மகேந்திரன் கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து, மண் வளப் பரிசோதனையின் அவசியம், வேளாண் வருவாயை உயா்த்தும் உத்திகளை விளக்கிப் பேசினாா். மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ப. சுப்புராஜ், வேளாண் துணை இயக்குநா் அமுதன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
இதையடுத்து, மதுரை மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களைச் சோ்ந்த விவசாயிகள், வேளாண் துறை, வேளாண் கல்லூரி, ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், வேளாண் தொழில் நுட்ப வல்லுநா்கள் 13 குழுக்களாகப் பிரிந்து, வேளாண் வருவாயை உயா்த்தும் உத்திகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனா்.
தோட்டக்கலைப் பயிா்கள் பயிரிடுதல், மதிப்புக் கூட்டுதல், பண்ணைக் கருவிகளை உபயோகித்தல், கால்நடைகள் வளா்ப்பு, தேனீக்கள் வளா்ப்பு, காளான் வளா்ப்பு உள்ளிட்ட உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
முன்னதாக, வேளாண் விரிவாக்கம், ஊரக சமுதாயவியல் பேராசிரியா் இரா. வேலுசாமி வரவேற்றாா். வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் இ. சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.