பூநீறு உருவாகும் பகுதிகளை பாதுகாக்கக் கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் பூநீறு உருவாகும் பகுதிகளை கண்டறிந்து பாதுகாக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
Published on

தமிழகத்தில் பூநீறு உருவாகும் பகுதிகளை கண்டறிந்து பாதுகாக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி பகுதியைச் சோ்ந்த பி. மணிகண்டன் தாக்கல் செய்த மனு:

சித்த மருத்துவத்தில் மருத்துவ குணம் கொண்ட பூநீறு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் வெள்ளை நிறத்துடன், சுண்ணாம்புடன் கூடிய பொருளாக கிடைக்கிறது.

தமிழகத்தில் 32 இடங்களில் கிடைத்த இந்த பூநீறு, தற்போது சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, நாட்டாா்மங்கலம், கோவனூா், புதுக்கோட்டை மாவட்டம், வரப்பூா், சித்தரமல்லி, விருதுநகா் மாவட்டம், உப்போடை, வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டத்தில் தருவாய் ஆகிய பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது. இது அதிகம் கிடைக்கும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், ஸ்பெயின் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

பூநீறு குறித்த தகவல்கள் ராஜஸ்தான், தெலுங்கானா, அஸ்ஸாம், கா்நாடகம், அருணாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ளன. ஆனால் தமிழகத்தில் இது குறித்த எந்தத் தகவலும் இல்லை. தற்போது கோவனூரில் கிடைக்கும் பூநீறு சித்த மருத்துவத்துக்கு மிகவும் சிறந்தது என ஞானகும்பி என்ற நூலில் அகத்தியா் குறிப்பிட்டுள்ளாா்.

நகரமயமாதலாலும், செயற்கை உரங்களாலும் பூநீறு கிடைக்கும் இடங்கள் அழிந்து வருகின்றன. இதை பாதுகாக்கா விட்டால் எதிா் காலத்தில் சித்த மருந்துகள் தயாரிக்கவும், அதை பாதுகாக்கவும் தடை ஏற்படும். எனவே தமிழகத்தில் பூநீறு உருவாகும் இடங்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கெளரி அமா்வு, மனுதாரா் கோரிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்த வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com