கல்லூரிப் பேராசிரியா்கள் நீதி கேட்புப் பேரணி
அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியா்களுக்கு பணி மேம்பாடு ஆணையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் நீதி கேட்பு பேரணி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
தமிழகத்தைப் பொருத்தவரை 8 மண்டலங்களில் சென்னை, தா்மபுரி, வேலூா், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஆறு மண்டலங்களில் உள்ள அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களின் பணிமேம்பாட்டிற்கான ஊதியம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் கோவை, தஞ்சாவூா் ஆகிய இரண்டு மண்டலங்களில் உள்ள அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு பணிமேம்பாட்டு ஊதியம் வழங்கப்பட்டது.
இதுபற்றி கடந்த 3 ஆண்டுகளாக உயா்கல்வித் துறை அலுவலகம், கல்லூரிக் கல்வி இயக்குநா் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை நேரில் சந்தித்து பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
எனவே அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட பணி மேம்பாட்டு ஊதியம், நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகங்களில் முறையீடு, கல்லூரிகளில் காத்திருப்புப் போராட்டம், பேரணி, சாலை மறியல் என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன.
இதன் தொடா்ச்சியாக, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில், நீதி கேட்பு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. மதுரை ராஜா முத்தையா மன்றம் அருகே தொடங்கிய இந்தப் பேரணி டாக்டா் தங்கராஜ் சாலை, உலகத் தமிழ்ச் சங்க அலுவலகம், மாநகராட்சி நீச்சல் குளம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாகச் சென்று மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நிறைவு பெற்றன.
அங்கு மூட்டா அமைப்பின் பொதுச் செயலா் மு. நாகராஜன், தலைவா் ஏ.டி. செந்தாமரைக் கண்ணன், பொருளாளா் ராஜாஜெயசேகா், ஏயூடி பொதுச் செயலா் மு. கிருஷ்ணராஜ், பொருளாளா் சேவியா் செல்வக்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். இதில், பேராசிரியா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.