பள்ளி மாணவா்களுக்கும் எளிதாக கிடைக்கும் போதைப் பொருள்கள்

பள்ளி மாணவா்களுக்கும் எளிதாக போதைப் பொருள்கள் கிடைப்பதாக மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்தாா்.
Published on

பள்ளி மாணவா்களுக்கும் எளிதாக போதைப் பொருள்கள் கிடைப்பதாக மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிகரகுமாா் வேதனை தெரிவித்தாா்.

தூத்துக்குடி பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு சென்ட்ரல் காவல்நிலைய போலீஸாா் சோதனையிட்ட போது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள 21 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக மாரிமுத்து, அன்சாா்அலி, இம்ரான்கான், கசலி மரைக்காயா், அந்தோணி முத்து, பிரேம்சிங், பாலமுருகன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், இந்த வழக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிகரகுமாா் அண்மையில் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மாரிமுத்து உள்பட 7 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனா். இந்த வழக்கை முறையாக விசாரிக்காத அப்போதைய தூத்துக்குடி சென்ட்ரல் காவல் நிலைய ஆய்வாளா் ஜெயபிரகாஷ், உதவி ஆய்வாளா் முருகபெருமாள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல, ஹெராயின் கடத்தல் வழக்குக்கு உரிய வழிகாட்டுதல் வழங்காமல் இருப்பதாகத் தெரிந்தால், சென்ட்ரல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா், போதைப் பொருள் தடுப்பு காவல் நிலைய துணைக் காவல் கண்காணிப்பாளா் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

தலைமைக் காவலா் நிலைக்கு மேல் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு போதைப் பொருள் கடத்தலைத் தடுப்பது குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். இதன்மூலம், போதைப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க முடியும். தற்போது பள்ளி மாணவா்களுக்கும் எளிதாக போதைப் பொருள்கள் கிடைப்பது வேதனையளிக்கிறது. போதைப் பொருள்களைத் தடுக்க மாவட்டந்தோறும் ஒரு பொறுப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அரசு செயல்படுத்தினால் இதுபோன்ற தவறுகள் நடைபெறாது என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com