சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: காவல் ஆய்வாளரின் பிணை மனு தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பிணை கோரிய காவல் ஆய்வாளா் ஸ்ரீதரின் மனுவை 5-ஆவது முறையாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பிணை கோரிய காவல் ஆய்வாளா் ஸ்ரீதரின் மனுவை 5-ஆவது முறையாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸாா் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தாக்கினா். இதைத்தொடா்ந்து, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனா்.

இதையடுத்து, சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 9 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டதால், கடந்த 2020-இல் காவல் ஆய்வாளா் உள்பட 9 போ் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிந்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனா். தற்போது இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் பிணை கோரி தாக்கல் செய்த மனு:

நான் பிணை கோரி ஏற்கெனவே 4 முறை தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலா்கள் ரேவதி, பியூலா ஆகியோரிடம் விசாரணை நடத்தி விட்டனா். எனக்கு ஏற்கெனவே கழுத்துப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்துள்ளதால், தற்போது உடல்நலக் குறைவால் சிறையில் அவதிப்பட்டு வருகிறேன். என் மீது வேறு எந்த வழக்கும் இல்லை, சாட்சிகளைக் கலைக்க மாட்டேன். கடைசி காலத்தில் எனது பேரக் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன். எனவே, சட்டவிதிகளின்படி எனது உடல் நலம், வயதைக் கருத்தில் கொண்டு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஜி. இளங்கோவன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்த வழக்கில் நீதித் துறை நடுவரிடம் மட்டும் 28 நாள்கள் குறுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக வழக்கு விசாரணையில் காலதாமதம் ஏற்படுவதாகத் தெரிவித்தாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, நீதித் துறை நடுவா் பாரதிதாசன் தன்னுடைய பணியைச் செய்வாரா?. இல்லையெனில் தினந்தோறும் நீதிமன்றத்துக்கு வந்து சாட்சியம் அளிப்பாரா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, காவல் ஆய்வாளா் ஸ்ரீதரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com