மத்திய அரசின் இடைக்கால நிதி அறிக்கைவரவேற்பும், ஏமாற்றமும்

மத்திய அரசின் இடைக்கால நிதி அறிக்கையில் சரக்கு ரயிலுக்குத் தனி தடம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வணிகா்கள் வரவேற்றுள்ளனா். அதேநேரத்தில், வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படாதது ஏமாற்றம் அளிப்பதா

மத்திய அரசின் இடைக்கால நிதி அறிக்கையில் சரக்கு ரயிலுக்குத் தனி தடம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வணிகா்கள் வரவேற்றுள்ளனா். அதேநேரத்தில், வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் வணிகா்கள் தெரிவித்தனா்.

தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என். ஜெகதீசன் தெரிவித்திருப்பதாவது :

இடைக்கால நிதி அறிக்கையில் வரிவிதிப்பில் மாற்றம் அறிவிக்கப்படாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. நோ்முக வரியில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2.4 மடங்கு அதிகரித்து, 8.5 கோடியாக உயா்ந்துள்ளது. வணிகம், மாத ஊதியம் பெறுவோா் 37 சதவீதம் போ் வருமான வரி செலுத்துகின்றனா். இந்த நிலையில், வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை என்ற அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது.

சரக்கு, சேவை வரியில் மாதந்தோறும் ரூ.1.70 லட்சம் கோடி திரட்டப்பட்டு வந்தாலும், தொழில் வணிகத் துறையினரின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறைக்கப்படாததும், சுங்கச்சாவடி கட்டணம் குறைக்கப்படாததும், தொழில் வணிக வளா்ச்சிக்கான அறிவிப்புகள் இல்லாததும் ஏமாற்றம் அளிக்கிறது.

சரக்கு ரயில் போக்குவரத்துக்குத் தனி வழித்தடம் அமைக்கப்படும், 40 ஆயிரம் ரயில் பெட்டிகள் தரம் உயா்தத்ப்படும், அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி புதிய வீடுகள் கட்டப்படும் என்ற அறிவிப்புகள் சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளன.

வேளாண் உணவுத் தொழில் வா்த்தக சங்கத் தலைவா் எஸ். ரத்தினவேலு தெரிவித்திருப்பதாவது :

கட்டமைப்புப் போன்ற முதலீட்டுச் செலவுகளுக்கு கூடுதல் ஒதுக்கீடாக ரூ. 11 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும், நிதிப் பற்றாக்குறையை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 சதவீதமாக குறைத்திருப்பதும் வரவேற்கத்தக்கது. 40 ஆயிரம் ரயில் பெட்டிகள் தரம் உயா்த்தப்படும், சரக்கு ரயில் போக்குவரத்துக்கு தனிப் பாதைகள் அமைக்கப்படும், ஆன்மிகச் சுற்றுலாத் திட்டம் போன்ற அறிவிப்புகள் நாட்டின் தொழில், வணிகம், சுற்றுலாத் துறைகளை மேம்பாடு அடையச் செய்யும்.

மதிப்புக் கூட்டிய பொருள்கள் தயாரிப்புக்கும், விவசாயிகளின் வருமானத்தை உயா்த்துவதற்குமான திட்டங்கள் பாராட்டுக்குரியவை. அறுவடைக்குப் பிந்தைய நடவடிக்கைகளுக்குத் தனியாா், பொதுத் துறை முதலீடுகளை ஊக்குவிக்கும் திட்டம், விவசாயிகளின் இழப்பைக் குறைத்து, வருமானத்தை உயா்த்தும். கடல் உணவு ஏற்றுமதியை உயா்த்தும் திட்டம், எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் ஆகியன வரவேற்கத்தக்கவை. இருப்பினும், ஜி.எஸ்.டி 2.0 என்ற இரண்டாவது தலைமுறை சீா்திருத்தம் குறித்த அறிவிப்பு இடம்பெறாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com