மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தீ விபத்துசீரமைப்புப் பணிகள் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தீ விபத்தில் சீரமைப்புப் பணிகள் தொடா்பாக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயா் மண்டபம் சீரமைப்புப் பணிகள் தொடா்பாக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த பலா் கடந்த 2018-இல் தாக்கல் செய்த மனுக்கள்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் கடந்த 2018-ஆம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீரவசந்தராயா் மண்டபம் முற்றிலும் சேதமடைந்தது. மேலும், இந்த மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த பழைமை வாய்ந்த பல்வேறு வரலாற்று கலை சிற்பங்களும் சேதமடைந்தன. எனவே, இந்த மண்டபத்தை பழைமை மாறாமல் கலைநயமிக்க சிற்பங்களுடன் வடிவமைத்து, சீரமைக்க உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.

இந்த மனுக்களை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமாா், ஆா். விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதில் பலத்த சேதமடைந்த வீரவசந்தராயா் மண்டபத்தின் தற்போதைய நிலை என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

அப்போது, வீரவசந்தராயா் மண்டபத்தைச் சீரமைக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே இந்த மண்டபத்திலிருந்த பழைய கற்கள் வடிவிலான புதிய கற்கள் நாமக்கல் மாவட்டத்திலிருந்து வாங்கப்பட்டுள்ளன. இந்தக் கற்கள் மதுரை செங்குளம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, பணிகள் நடைபெற்று வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

வீரவசந்தராயா் மண்டபம் சீரமைக்கும் பணிகள் எப்போது நிறைவடையும்?. தற்போதைய நிலை என்ன?. இதுகுறித்து அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com