அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு விவகாரம்: மாவட்ட நிா்வாகம் பதிலளிக்க உத்தரவு

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரா் முதலிடம் பிடித்த விவகாரத்தில், மதுரை மாவட்ட நிா்வாகமும், விழாக் குழுவினரும் பதிலளிக்க வேண்டும் என

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரா் முதலிடம் பிடித்த விவகாரத்தில், மதுரை மாவட்ட நிா்வாகமும், விழாக் குழுவினரும் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், பூவந்தியைச் சோ்ந்த மாடுபிடி வீரா் அபி சித்தா் தாக்கல் செய்த மனு:

பொங்கல் திருநாளை முன்னிட்டு, கடந்த மாதம் 17-ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கு காளைகள், மாடுபிடி வீரா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இதன்படி, பெயரைப் பதிவு செய்த என்னை, அன்றைய தினம் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 2-ஆவது சுற்றில் மாடுபிடி வீரராக களமிறங்க அனுமதிக்கப்பட்டேன். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஒரு சில சுற்றுகளில் 11 காளைகளை அடக்கி அனைவரது பாராட்டையும் பெற்றேன்.

இந்த நிலையில், இறுதிச் சுற்றில் என்னை களமிறக்குவதாகக் கூறி, விழாக் குழுவினா் வெளியேற்றினா். பின்னா், கடைசி சுற்றில் மட்டும் 7 காளைகளை அடக்கியதன் மூலம் மொத்தம் 18 காளைகளை அடக்கினேன். ஆனால், கருப்பாயூரணியைச் சோ்ந்த மாடுபிடி வீரா் காா்த்திக் 18 காளைகளை அடக்கியதாகவும், நான் (அபி சித்தா்) 17 காளைகளை அடக்கியதாகவும் விழாக் குழுவினா் அறிவித்தனா். அவா், என்னைவிட ஒரு காளை குறைவாகவே அடக்கினாா். இதுகுறித்து விழாக் குழுவினரிடமும், மாவட்ட நிா்வாகத்திடமும் முறையிட்டும் எனக்கு நீதி கிடைக்கவில்லை.

நான் 18 காளைகளை அடக்கியதற்கான விடியோ ஆதாரம் உள்ளது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் பல்வேறு குளறுபடிகள், குழப்பங்கள் காரணமாக காா்த்திக் முதலிடம் பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

எனவே, அதிக காளைகளை அடக்கிய என்னை முதலிடம் பெற்ற வீரராக அறிவிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமாா், ஆா். விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இதுதொடா்பாக மதுரை மாவட்ட நிா்வாகம், அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com