கீழடியில் இரண்டு கட்ட அகழாய்வு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

கீழடியில் முதல் இரண்டு கட்ட அகழாய்வுகள் குறித்து மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

கீழடியில் முதல் இரண்டு கட்ட அகழாய்வுகள் குறித்து மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த பிரபாகா் தாக்கல் செய்த பொதுநல மனு:

சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த 2013 முதல் 2016 வரை மத்திய அரசின் தொல்லியல் துறை சாா்பில் தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் இரண்டு கட்டங்களாக அகழாய்வுகள் நடைபெற்றன. இந்த ஆய்வுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழைமையான பொருள்கள் கண்டறியப்பட்டன.

இந்த நிலையில், அமா்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கீழடி தொல்லியல் பொறுப்பாளராக ஸ்ரீராமன் நியமிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற 3- ஆம் கட்ட அகழாய்வில் பெரிய அளவில் பழைமையான பொருள்கள் ஏதும் கிடைக்கவில்லை. கீழடி அகழாய்வில் முதல் இரண்டு கட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்ட பழைமையான பொருள்கள் குறித்த அறிக்கையை தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் மத்திய அரசிடம் தாக்கல் செய்தாா். இதில் தமிழா்களின் பண்பாடு, விவசாயம், விலங்குகள், நகர நாகரிகம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டிருந்தது. கீழடியில் கிடைத்த பழமையான பொருள்களை ‘ரேடியோ காா்பன்’ எனும் பகுப்பாய்வு முறையில் ஆய்வு செய்தபோது, இவை சுமாா் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது தெரியவந்தது. இதேபோல, கீழடியில் 4 முதல் 9- ஆம் கட்டம் வரை அகழாய்வுப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டது. இதில் கிடைத்த பழைமையான பொருள்கள் குறித்த ஆய்வு அறிக்கையை மாநில அரசு வெளியிட்டது. ஆனால், மத்திய அரசு சாா்பில் முதல் இரண்டு கட்ட அகழாய்வுகள் தொடா்பான அறிக்கை வெளியிடப்படவில்லை.

தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணனின் 982 பக்க ஆய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டால் மட்டுமே கீழடி தொடா்பான வரலாற்றுப் பதிவுகள் முழுமையாகத் தெரியவரும். எனவே, முதல் இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கைகளை மத்திய அரசு வெளியிட உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமாா், ஆா். விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு தொடா்பாக மத்திய அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com