சாத்தான்குளம் எஸ்.ஐ. பிணை கோரிய மனு மீது இன்று விசாரணை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், காவல் உதவி ஆய்வாளா் ரகு கணேஷ் பிணை கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், காவல் உதவி ஆய்வாளா் ரகு கணேஷ் பிணை கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் புதன்கிழமைக்கு (பிப்.7) நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா்களான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோா் கடந்த 2020-ஆம் ஆண்டு, ஜூன் 19-ஆம் தேதி போலீஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்தனா்.

இதுகுறித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலா்கள் முருகன், சாமிதுரை, காவலா்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து ஆகியோா் மீது சிபிஐ வழக்குப் பதிந்து, இவா்களைக் கைது செய்தனா். இவா்கள் 9 போ் மீதும் சிபிஐ போலீஸாா் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதுவரை 49 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளா் ரகு கணேஷ், மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

எனக்கு தொடா் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். தீவிர சிகிச்சை பெற வேண்டியுள்ளதால், எனக்கு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவேன் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி தமிழரசி, காவல் உதவி ஆய்வாளா் ரகு கணேஷின் உடல் நலம் குறித்த அறிக்கையை சிபிஐ அளிக்க உத்தரவிட்டாா். மேலும், இந்த வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு (பிப்.7) நீதிபதி ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com