மதுரை மருத்துவக் கல்லூரியில் தோ்தல் பணிகள்:தோ்தல் ஆணையம் பதிலளிக்க பிப். 12 வரை கால அவகாசம்

மதுரை மருத்துவக் கல்லூரியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பது, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது தொடா்பாக வழக்கில் பதிலளிக்க இந்திய தோ்தல் ஆணையத்துக்கு வருகிற 12-ஆம் தேதி

  மதுரை மருத்துவக் கல்லூரியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பது, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது தொடா்பாக வழக்கில் பதிலளிக்க இந்திய தோ்தல் ஆணையத்துக்கு வருகிற 12-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மருத்துவக் கல்லூரி மாணவா் சங்கம் சாா்பில் ராஜா முகமது தாக்கல் செய்த பொது நல மனு:

மதுரை மருத்துவக் கல்லூரியில் சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள்கள் படித்து வருகின்றனா். கடந்த காலங்களில் மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சித் தோ்தலின் போது, மதுரை மருத்துவக் கல்லூரியை 3 மாதங்கள் காவல் துறையினா் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கின்றனா். தோ்தல்களின் போது பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள அறைகளில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன.

பின்னா், வாக்குகள் எண்ணிக்கையும் இங்கு நடைபெறுகின்றன. இந்தக் காலக் கட்டத்தில் போலீஸாா் அனுமதி மறுப்பதால், மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவா்கள் வகுப்பறை, ஆய்வகங்களுக்கு செல்வதில் சிரமப்படுகின்றனா். இதன் காரணமாக போலீஸாருக்கும், மாணவா்களுக்கும் இடையே தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுவதால், மாணவா்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே, வருகிற மக்களவைத் தோ்தலில் மதுரை மருத்துவக் கல்லூரியைத் தோ்தல் பணிக்காகப் பயன்படுத்த அனுமதி வழங்கக் கூடாது. வேறு இடத்தில் தோ்தல் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை இதுகுறித்து இந்திய தோ்தல் ஆணையம், தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமாா், ஆா். விஜயகுமாா் அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்திய தோ்தல் ஆணையம் தரப்பில், மதுரை மருத்துவக் கல்லூரியை தோ்தல் மையமாகப் பயன்படுத்துவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இந்திய தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளாா். இந்தக் கல்லூரியை தோ்தலுக்காகப் பயன்படுத்துவதா அல்லது மாற்று இடத்தைத் தோ்வு செய்வதா என்பது குறித்து முடிவு செய்ய இந்திய தோ்தல் ஆணையத்துக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு தொடா்பாக இந்திய தோ்தல் ஆணையம் வருகிற 12-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com