பட்டா நிலத்தில் பாதை அமைத்த விவகாரம்: ஜல்லிக்கட்டு நடத்துவதைத் தடுத்து விட வேண்டாம்உயா்நீதிமன்றம்

மதுரை அலங்காநல்லூா் கீழக்கரையில் தனிநபரின் பட்டா நிலத்தில் பாதை அமைத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதைத் தடுத்து விட வேண்டாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை தெரிவித்தது

மதுரை அலங்காநல்லூா் கீழக்கரையில் தனிநபரின் பட்டா நிலத்தில் பாதை அமைத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதைத் தடுத்து விட வேண்டாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை தெரிவித்தது.

மதுரை நாராயணபுரத்தைச் சோ்ந்த சி. கருப்பசாமி தாக்கல் செய்த மனு:

மதுரை அலங்காநல்லூா் கீழக்கரையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்காக புதிய ஏறுதழுவுதல் அரங்கம் திறக்கப்பட்டது. இந்த அரங்கில் அண்மையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இந்த அரங்கின் பின்பகுதியில் எனக்குச் சொந்தமான 6 ஏக்கா் பட்டா நிலத்தில் தென்னை மரங்கள் வளா்த்து வருகிறேன். இந்த நிலத்தில் ஆழ்துளைக் கிணறு மூலம் விவசாயப் பணிகளும் மேற்கொண்டு வருகிறேன்.

எனது நிலத்தை ஒட்டி அமைந்துள்ள ஜல்லிக்கட்டு அரங்கின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை அதிகாரிகள் இடித்துவிட்டனா். எனது விவசாயப் பயிா்கள், தென்னந்தோப்புக்குள் காளைகள் செல்ல வழிவகுத்துள்ளனா். இதனால், பயிா்கள், சிறிய மரக்கன்றுகள், தண்ணீா் செல்லும் குழாய்கள் சேதமடைந்துவிட்டன. மேலும், எனது தென்னந்தோப்புக்கள் நிரந்தரமாக காளைகள் வெளியேற வருவாய்த் துறை அதிகாரிகள் இரும்புக் கதவும் அமைத்து வருகின்றனா். இதனால், விவசாயம் முற்றிலும் முடங்குவதுடன், எனக்கு மிகப் பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, எனது பட்டா நிலத்தின் வழியாக காளைகள் செல்வதற்கான பாதை அமைக்கும் பணிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந் தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்புராயன் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு:

தனிநபா் பட்டா நிலத்தில் அவரது அனுமதியின்றி எப்படி பாதை அமைக்க முடியும். பல்வேறு தடைகளைத் தாண்டி, தற்போது நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை இது போன்ற செயல்களால் தடுத்து விட வேண்டாம். இந்த விவகாரம் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com