மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா தை மாதம் தைப்பூச தினத்தில் நடைபெறும். இதையொட்டி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தெப்பத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி, சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயில் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள கொடிமரம் முன் சுவாமி, அம்மன் எழுந்தருளினா். சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க தங்கக் கொடி மரத்துக்கு பூஜைகள் தொடங்கின. கொடி மரத்தில் தா்ப்பைப்புல் சாத்திக் கட்டிய நிலையில், காளை, லிங்கம் பொறித்த கொடி மீன லக்னத்தில் ஏற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, கொடி மரத்துக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு, பூக்களும் தூவப்பட்டன.

கொடியேற்றத்துக்குப் பிறகு தீபாராதனைகள் தொடங்கின. இதையடுத்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. தெப்பத் திருவிழா கொடியேற்றத்துக்குப் பிறகு சுவாமி, அம்மன் குலாலா் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனா். இரவில் அம்மன் சிம்ம வாகனத்திலும், சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தனா்.

திங்கள்கிழமை காலை 9 மணிக்கு தங்கச் சப்பரத்தில் எழுந்தருளும் அம்மன், சுவாமி தெற்காவணி மூல வீதி, சின்னக்கடைத் தெரு, தெற்குவாசல் வழியாக குஞ்சான் செட்டியாா் மண்டபத்தில் எழுந்தருளுகின்றனா். அங்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. பின்னா், இரவில் அம்மன் அன்ன வாகனத்திலும், சுவாமி பூத வாகனத்திலும் அங்கிருந்து புறப்பாடாகி கோயிலை அடைவா்.

செவ்வாய்க்கிழமை முதல் சுவாமி, அம்மன் காலை, மாலையில் சித்திரை வீதிகளில் சிறப்பு வாகனங்களில் அருள்பாலிக்கும் நிலையில், ஜனவரி 19-இல் திருஞான சம்பந்தா் சுவாமிகள் சைவ சமய வரலாற்று லீலை, 21-ஆம் தேதி மச்சஹந்தி விவாஹம், 22-ஆம் தேதி சப்தாவா்ண சப்பரம் எடுப்புத் தேரில் சுவாமி எழுந்தருளல், 23-இல் அம்மன் சுவாமி தங்கப் பல்லக்கில் தெப்பத்துக்கு புறப்பாடாகி தெப்பம் முட்டுத்தள்ளுதல், 24-ஆம் தேதி சிந்தாமணியில் கதிா் அறுப்புத் திருவிழா ஆகியவை நடைபெறுகின்றன.

முக்கிய விழாவான தெப்பத் திருவிழா வருகிற 25-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலையில் மீனாட்சி சுந்தரேசுவரா் பஞ்சமூா்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி, வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளம் சென்று அலங்கரிக்கப்பட்ட மிதவைத் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வருகின்றனா். பின்னா், இரவு 10 மணிக்கு மேல் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குத் திரும்புகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com