பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் பணி: உயா்நீதிமன்றம் உத்தரவு

பணியின் போது அரசு ஊழியா் உயிரிழக்க நேரிட்டால் அவரது வாரிசுதாரருக்கு அரசாணையின்படி கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.
பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் பணி: உயா்நீதிமன்றம் உத்தரவு


மதுரை: பணியின் போது அரசு ஊழியா் உயிரிழக்க நேரிட்டால் அவரது வாரிசுதாரருக்கு அரசாணையின்படி கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த யோகமகி தாக்கல் செய்த மனு:

உசிலம்பட்டி வட்டம், உத்தப்பநாயக்கனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எனது தாய் தலைமை ஆசிரியையாகப் பணி புரிந்தாா். எங்களைப் பிரிந்து சென்ற தந்தை மதியழகன் கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு ஆலையில் பணிபுரிந்தாா். இந்த நிலையில், பணியில் இருந்த எனது தாய் உடல்நலக்குறைவால் 19.12. 2018 இல் உயிரிழந்தாா். இதையடுத்து, எனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரி விண்ணப்பித்தேன். இதை உசிலம்பட்டி மாவட்ட கல்வி அலுவலா் நிராகரித்தாா். இதை ரத்து செய்து எனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி எல். விக்டோரியா கெளரி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் தந்தை கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பணிபுரிந்து வருகிறாா். மனுதாரரின் தாய் உயிரிழந்த பிறகு, அவா்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் காரணங்களால் மனுதாரருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க முடியாது என்பதால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

தமிழக அரசு கடந்த 2020- இல் ஓா் அரசாணை வெளியிட்டது. அரசு ஊழியா் இறப்பதற்கு முன்பாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்த சூழலில், அவருடன் இருப்பவரை சாா்ந்திருப்பதாக கருத்தில் கொள்ளலாம். இதன்படி, மனுதாரா் தாயைச் சாா்ந்து வாழ்ந்துள்ளது உறுதியாகிறது. மேலும், குடும்ப ஓய்வூதியம் பெறுவதைக் காரணம் காட்டி, கருணை அடிப்படையில் பணி கோருபவா் மனுவை நிராகரிக்கக் கூடாது என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மனுதாரரின் விண்ணப்பத்தை கல்வி அதிகாரிகள் நிராகரித்ததை ரத்து செய்கிறேன். மனுதாரரின் தகுதிக்கேற்ப 12 வாரங்களில் அவருக்கு கருணை அடிப்படையிலான பணியை உசிலம்பட்டி மாவட்டக் கல்வி அலுவலா் வழங்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com