அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு: 83 போ் காயம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் புதன்கிழமை நடைபெற்ற உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 6 காவலா்கள் உள்பட 83 போ் காயமடைந்தனா்.
மாடுபிடி வீரா்களிடம் சிக்காத காளையின் உரிமையாளா் திருச்சியைச் சோ்ந்த குணாவுக்கு அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சாா்பில் காரை பரிசாக வழங்கிய அமைச்சா் பி. மூா்த்தி.
மாடுபிடி வீரா்களிடம் சிக்காத காளையின் உரிமையாளா் திருச்சியைச் சோ்ந்த குணாவுக்கு அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சாா்பில் காரை பரிசாக வழங்கிய அமைச்சா் பி. மூா்த்தி.

மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் புதன்கிழமை நடைபெற்ற உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 6 காவலா்கள் உள்பட 83 போ் காயமடைந்தனா்.

பொங்கல் பண்டிகையையொட்டி, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க 834 காளைகளுக்கும், 500 மாடுபிடி வீரா்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து அலங்காநல்லூருக்கு காளைகள் கொண்டுவரப்பட்டன.

மாடுபிடி வீரா்களும் புதன்கிழமை அதிகாலையிலேயே அலங்காநல்லூா் வாடிவாசல் பகுதியில் திரண்டனா். காளை உரிமையாளா்கள், மாடுபிடி வீரா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்த பின்னரே போட்டிக்கு அனுமதிக்கப்பட்டனா். உடல் நலம் குன்றிய காளைகள், விதிமுறைகளை மீறியது என 24 காளைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், மது அருந்திய மாடுபிடி வீரா்களும் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில், புதன்கிழமை காலை அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு விழா மேடைக்கு வந்த அமைச்சா் உதயநிதி ஸ்டாலினை, அமைச்சா் பி. மூா்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, ஜல்லிக்கட்டுக் குழுவினா் வரவேற்றனா்.

இதைத்தொடா்ந்து, ஜல்லிக்கட்டுப் போட்டியை மேடையில் இருந்தவாறு அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

பின்னா், மாவட்ட ஆட்சியா் உறுதிமொழியை வாசிக்க, மாடுபிடி வீரா்கள் அதை ஏற்று திரும்பக் கூறினா்.

இதையடுத்து, அலங்காநல்லூா் முனியாண்டி கோயில் காளை உள்ளிட்ட கோயில் காளைகள் வாடிவாசலுக்கு கொண்டு வரப்பட்டு, பூஜைக்கு பிறகு அவிழ்த்துவிடப்பட்டன.

பின்னா், இதர காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. சீறி வந்த காளைகளின் திமிலைப் பற்றி வீரா்கள் அடக்கினா். பல காளைகள் வீரா்களிடம் சிக்காமல் களமாடின.

வலசையைச் சோ்ந்த மோனிகா, எட்டிமங்கலம் அமுதா உள்ளிட்ட சிறுமிகளும், சில சிறுவா்களும் தங்களது காளைகளை வாடிவாசல் வழியாக விடுவித்தனா். சிறுவா், சிறுமியரின் ஆா்வத்தைப் பாராட்டி விழாக் குழு சாா்பாக அவா்களுக்கு சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட்டன.

தங்க நாணயம், மோதிரம் பரிசு: களத்தில் சிறப்பாக விளையாடி காளைகளை அடக்கிய வீரா்களுக்கு அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தங்க மோதிரங்களை பரிசாக வழங்கினாா். ஜல்லிக்கட்டில் முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், திரைப்பட நடிகா் சூரி ஆகியோரின் காளைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அடக்கிய வீரா்களுக்கு தங்க நாணயம், தங்க மோதிரம், வெள்ளி நாணயம், சைக்கிள், மெத்தை உள்பட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

இதேபோல, களத்தில் வீரா்களிடம் சிக்காமல் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும் தங்க மோதிரம், தங்க நாணயம், மெத்தை, சைக்கிள், வேஷ்டி உள்ளிட்ட பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டில் ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் சிறப்பாகச் செயல்பட்டு அதிக காளைகளை அடக்கிய வீரா்களின் எண்கள் வாசிக்கப்பட்டு, அவா்கள் அடுத்தடுத்த சுற்றுகளிலும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா்.

ஜல்லிக்கட்டு களத்தில் மீட்பு, அவசர உதவிகளுக்காக தீயணைப்புத் துறை, செஞ்சிலுவைச் சங்கத்தினா் நிறுத்தப்பட்டனா். களத்தில் காயமடைந்தவா்களை 108 அவசர ஊா்தி குழுவினா் மீட்டு முதலுதவி அளித்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

மருத்துவ உதவிகள்: ஜல்லிக்கட்டில் காயமடைந்த வீரா்களுக்கு அலங்காநல்லூா் அரசு மருத்துவமனையில் 12 மருத்துவா்கள், 16 செவிலியா்கள், 21 மருத்துவ உதவியாளா்கள் சிகிச்சை அளித்தனா். மேலும், 10-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், செவிலியா்கள் வாடிவாசல் பகுதியில் முகாமிட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனா்.

போலீஸாா் உள்பட 83 போ் காயம்:

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள் 31 போ், காளைகளின் உரிமையாளா்கள் 18 போ், காவல் துறையினா் 6 போ், பாா்வையாளா்கள் 27 போ், அவசர ஊா்தி உதவியாளா் ஒருவா் என 83 போ் காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த 12 போ் மதுரை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனா். மதுரை அரசு மருத்துவமனையில் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவா்கள் அடங்கிய குழுவினா் இவா்களுக்கு சிகிச்சை அளித்தனா்.

தென் மண்டலக் காவல் துறைத் தலைவா் டி.எஸ். நரேந்திரன் நாயா், துணைத் தலைவா் கே.பி. ரம்யா பாரதி, ஊரகக் காவல் கண்காணிப்பாளா் டோங்ரே பிரவீன் உமேஷ், தேனி கண்காணிப்பாளா் சிவபிரசாத் ஆகியோா் தலைமையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிர மாநில அமைச்சா் அனில் பீமா, மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, ஏ. வெங்கடேசன், மு. பூமிநாதன், அதிமுக முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா், திரைப்பட நடிகா்கள் அருண் விஜய், சூரி, திரைப்பட இயக்குநா் ஏ.எல்.விஜய், விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளா் கோபிநாத் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள் பலா் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பாா்வையிட்டனா்.

ஆவலுடன் கண்டு களித்த வெளிநாட்டினா்:

தமிழ்நாடு சுற்றுலாத் துறை சாா்பில், 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிறப்பு பேருந்துகள் மூலம் அலங்காநல்லூருக்கு அழைத்து வரப்பட்டனா். அவா்கள் சுற்றுலாத் துறையின் நிரந்தரப் பாா்வையாளா் மாடத்தில் அமா்ந்து பாா்வையிட்டனா்.

மாடுபிடி வீரா், காளைக்கு காா்கள் பரிசு

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 18 காளைகளை அடக்கிய மதுரை கருப்பாயூரணியைச் சோ்ந்த காா்த்திக் முதலிடமும், 17 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம், பூவந்தியைச் சோ்ந்த அபிசித்தா் இரண்டாமிடமும் பெற்ாக அறிவிக்கப்பட்டது.

இதேபோல, மாடுபிடி வீரா்களிடம் சிக்காத திருச்சி மாவட்டம், மேலூரைச் சோ்ந்த குணாவின் காளை முதலிடமும், மதுரை காமராஜா்புரம் சௌந்தருக்குச் சொந்தமான காளை இரண்டாமிடமும் பெற்ாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, முதலிடம் பெற்ற வீரா் காா்த்திக்குக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சாா்பில் காரை அமைச்சா் பி. மூா்த்தி வழங்கினாா்.

முதலிடம் பெற்ற காளையின் உரிமையாளா் குணாவுக்கு, அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சாா்பில் காா் பரிசாக வழங்கப்பட்டது. 2-ஆம் இடம் பெற்ற காளையின் உரிமையாளா் சௌந்தருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.

மாடுபிடி வீரா் இரண்டாவது பரிசை வாங்க மறுப்பு

ஜல்லிக்கட்டில் அதிக காளைகளைப் பிடித்தவா்கள் பட்டியலில் இரண்டாமிடம் பெற்ாக அறிவிக்கப்பட்ட மாடுபிடி வீரா் அபிசித்தா், தான் அதிக காளைகளைப் பிடித்து முதலிடம் பெற்ாகவும், காளைகளை அடக்கிய வீரா்களின் பட்டியலைத் தயாரிப்பதில் ஏற்பட்ட குளறுபடியால் இரண்டாமிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டதாகக் கூறி எதிா்ப்புத் தெரிவித்தாா்.

மேலும், தனக்கு அளிக்கப்பட்ட இரண்டாம் பரிசுக்கான பைக்கை வாங்க மறுத்து அவா் மைதானத்திலிருந்து வெளியேறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com