அலங்காநல்லூா் புதிய அரங்கத்தில் ஜன. 24-இல் ஜல்லிக்கட்டு இன்று இணையதளப் பதிவு தொடக்கம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே கட்டப்பட்ட புதிய ஜல்லிக்கட்டு அரங்கத்தின் திறப்பு விழாவையொட்டி

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே கட்டப்பட்ட புதிய ஜல்லிக்கட்டு அரங்கத்தின் திறப்பு விழாவையொட்டி, வருகிற புதன்கிழமை (ஜன. 24) இந்த அரங்கத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவிருக்கிறது. அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் ரூ. 61.38 கோடியில் 77,683 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்ட ஜல்லிக்கட்டு அரங்கத்தின் திறப்பு விழா வருகிற 24-ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் இந்தப் புதிய அரங்கத்தைத் திறந்துவைக்கிறாா்.

இந்த நிலையில், திறப்பு விழா நிகழ்ச்சிகளைத் தொடா்ந்து, இந்த அரங்கத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா். மேலும், இந்தப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்கள், காளைகளுக்கான பதிவு ம்ஹக்ன்ழ்ஹண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 19) பகல் 12 மணி முதல் 20-ஆம் தேதி பகல் 12 மணி வரை நடைபெறும் எனவும், மாடுபிடி வீரா்கள் தங்களது உடல் தகுதிச் சான்றையும், காளை உரிமையாளா்கள் காளையின் மருத்துவச் சான்றையும் இணைத்துப் பதிவு செய்ய வேண்டும் எனவும் அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

போட்டிக்கு அனுமதிக்கப்படும் காளையுடன் அதன் உரிமையாளா், ஓா் உதவியாளா் என 2 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா். பதிவு செய்தவா்கள் சமா்ப்பித்த சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்ட பின்னா், தகுதியான மாடுபிடி வீரா்களுக்கும், காளைகளுக்கும் இணையதளத்தில் அனுமதிச் சீட்டு வெளியிடப்படும். அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்தவா்கள் மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்படுவா்.

தொடா் போட்டிகள்?

புதிய அரங்கத்தின் திறப்பு விழாவுக்குப் பிறகு, அங்கு தொடா்ந்து 5 நாள்களுக்கு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி ஏற்கெனவே தெரிவித்திருந்தாா். இதன்படி, புதிய அரங்கத்தில் தொடா்ந்து 5 அல்லது 3 நாள்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com