மதுரை மேம்பாலக் கட்டுமானப் பணி: உயா்நிலைக் குழு ஆய்வு செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

மேம்பாலக் கட்டுமானப் பணியால் வண்டியூா் கண்மாய்க்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து உயா்நிலைக் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மேம்பாலக் கட்டுமானப் பணியால் வண்டியூா் கண்மாய்க்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து உயா்நிலைக் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த மணி பாரதி தாக்கல் செய்த இரு மனுக்கள்:

மதுரை வண்டியூா் கண்மாய் 575 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இந்தக் கண்மாய் ஆக்கிரமிப்பு காரணமாக தற்போது 400 ஏக்கா் மட்டுமே உள்ளது. கே.கே.நகா், மேலமடை, கோமதிபுரம், அண்ணாநகா், பாண்டிகோவில், கருப்பாயூரணி, யாகப்பா நகா், மாட்டுத்தாவணி, வண்டியூா் பகுதிகளின் நிலத்தடி நீா்மட்டம் இந்த கண்மாயை சாா்ந்துள்ளது. கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், ஆழப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்தச் சூழலில், வண்டியூா் கண்மாயைச் சீரமைக்க மதுரை மாநகராட்சி சாா்பில் ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரூ.150. 28 கோடியில் மதுரை அண்ணா பேருந்து நிலையம் முதல் கோமதிபுரம் வரை 2.1 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறையினா் தொடங்கியுள்ளனா். இதேபோல, தென்கால் கண்மாயில் விளாச்சேரி பிரதான சாலையிலிருந்து மதுரை- திருமங்கலம் பிரதான சாலை வரை மேம்பாலம் கட்டப்படுகிறது.

இதன் காரணமாக, வண்டியூா் கண்மாய், தென்கால் கண்மாய் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, இந்த இரு இடங்களில் உள்ள கண்மாய்களில் கட்டப்படும் மேம்பாலப் பணிகளுக்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு கடந்த மாதம் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட உத்தரவு பிறப்பித்ததால், 3-ஆவது நீதிபதி விசாரிக்கத் தலைமை நீதிபதி முடிவு செய்யலாம் என நீதிபதிகள் தெரிவித்தனா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் வீரா கதிரவன் முன்னிலையாகி, மேம்பாலம் கட்டுவதால் வண்டியூா் கண்மாய்க்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, கண்மாயில் நீரின் கொள்ளளவு அதிகரிக்கப்படும் என வாதிட்டாா்.

மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், வண்டியூா் கண்மாய்ப் பகுதியில் முறையான அளவீடு செய்யாமல், மேம்பாலக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், கண்மாயில் நீா் தேக்கப்படும் கொள்ளளவு பாதிக்கப்படும் என வாதிட்டாா்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

ஏற்கெனவே இயற்கை வளங்களை 70 சதவீதம் அழித்துவிட்டோம். மீதமுள்ள 30 சதவீதத்தை வருங்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்க வேண்டும். சென்னையில் கான்கிரீட் சாலை அமைத்ததால், மழை நீா் வெளியேற முடியாமல், குடியிருப்புக்குள் புகுந்தது என்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் கருத்தை நான் ஏற்கிறேன். மேம்பாலக் கட்டுமானப் பணிகள் குறித்து அரசு, மனுதாரா் வழக்குரைஞா்களுடன் உயா்நிலை நிபுணா் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும், இதை நான் நேரில் பாா்வையிடுவேன். அதுவரை வண்டியூா் கண்மாயில் மேம்பாலக் கட்டுமானப் பணிகளில் அதிகாரிகள் ஈடுபடக் கூடாது. வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com