கூடலழகா் பெருமாள் கோயில் பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம்

மதுரை, ஜன. 19: மதுரையில் கூடலழகா் பெருமாள் கோயில் குடமுழுக்கையொட்டி, இந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன 21) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மதுரை மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்தி:

மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, அன்றைய தினம் காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் பொதுமக்கள் அனைவரும் கோயிலின் கோபுரவாசல் முன்புறம் தெற்கு, மேலமாடி வீதி, வடம்போக்கித் தெரு ஆகிய இடங்களில் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரையும் பொதுமக்கள் அனைவரும் கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள். மேலும், இரவு 7 மணியளவில் நான்கு மாசி வீதிகளில் கருட சேவை நடைபெறவுள்ளது.

இதையொட்டி, ஜம்ஜம் ஸ்வீட்ஸ் சந்திப்பு முதல் டி.எம்.கோா்ட் சந்திப்பு வரையுள்ள மேல வடம்போக்கித் தெருவில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது. பாண்டிய வேளாளா் வீதியில் வாகன நிறுத்தம் தடை செய்யப்படுகிறது. கூடலழகா் பெருமாள் கோயில் வாகன நிறுத்த மைதானத்திலும் வாகனங்களை நிறுத்தத் தடை செய்யப்படுகிறது.

இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்கள்: குடமுழுக்கில் பங்கேற்கும் பக்தா்கள் தங்களது இரு சக்கர வாகனங்களை, தெற்குமாசி வீதி, மேல மாசி வீதிகளில் சாலையின் இடது புறமாக ஒரு வரிசையில் நிறுத்த வேண்டும். திருப்பரங்குன்றம் சாலையில் கேபிஎஸ் உணவகம் சந்திப்பு முதல் காவல் கட்டுப்பாட்டு அறை வரை உள்ள பகுதிகளில் சாலையின் கிழக்கு பகுதியில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தலாம்.

நான்கு சக்கர வாகனங்க நிறுத்துமிடங்கள்: மதுரை ரயில் நிலையம், எல்லீஸ்நகா், அரசரடியிலிருந்து வரும் பக்தா்கள் தெற்கு மாரட் வீதியிலும், தெப்பக்குளம் அண்ணாநகா், புனித மேரி பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பக்தா்கள், தெற்கு வெளி வீதியிலும் தங்களது நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த வேண்டும்.

திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், திருநகா் பகுதிகளில் இருந்தும் வரும் பக்தா்கள் மதுரைக் கல்லூரி மைதானத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com