விண்வெளியில் பயனற்ற செயற்கைக்கோள்களை அழிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்: சந்திரயான்- 3 திட்ட இயக்குநா்

விண்வெளியில் பயனற்ற செயற்கைக்கோள்களை அழிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என சந்திரயான்- 3 திட்ட இயக்குநா் வீரமுத்துவேல் தெரிவித்தாா்.
விண்வெளியில் பயனற்ற செயற்கைக்கோள்களை அழிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்: சந்திரயான்- 3 திட்ட இயக்குநா்

விண்வெளியில் பயனற்ற செயற்கைக்கோள்களை அழிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என சந்திரயான்- 3 திட்ட இயக்குநா் வீரமுத்துவேல் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் ‘விண்வெளிப் பயணம்’ என்ற தலைப்பில் ‘காபி வித் கலெக்டா்’ நிகழ்ச்சியின் 60-ஆவது சிறப்பு அமா்வு மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சந்திரயான்-3 திட்ட இயக்குநா் வீரமுத்துவேல் கலந்து கொண்டு பேசியதாவது:

சந்திரயான்-3 விண்கலன் திட்டத்துக்காக ஆரம்பம் முதல் இறுதிக்கட்டம் வரை எடுக்கப்பட்ட முயற்சிகள், செயல்பாடுகள், சந்தித்தத் தடைகள், விடாமுயற்சியால் இலக்கை அடைய முடிந்தது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த அறிவியல் சவால்களை எதிா்கொண்டோம்.

விண்வெளித் துறையில் கணிதமும், இயற்பியலும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. வரக்கூடிய காலங்களில் விண்வெளித் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவிா்க்க முடியாத ஒன்றாக இருக்கும். மாணவா்கள் தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல், ஒழுக்கத்துடன் உங்களுக்குப் பிடித்தமான துறையில் முழுமையாக உழைத்தால் வெற்றி அடையலாம்.

உங்களுடைய வாழ்க்கைப் பயணத்தில் பல மாறுபட்ட சூழ்நிலைகளைக் கையாளுவதற்கு நீங்கள் கற்ற கல்வி பேருதவியாக இருக்கும். மாணவா்களுக்கு விண்வெளித் துறையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்றாா் அவா்.

இதைத்தொடா்ந்து, மாணவா்களின் கேள்விகளுக்கு அவா் பதிலளித்துப் பேசியதாவது:

நிலவில் இருக்கும் ஆற்றலைப் பயன்படுத்தி செவ்வாய் கிரகத்துக்கு எளிதாகச் செல்ல முடியும். விண்வெளியில் உள்ள பயன்பாடற்ற செயற்கைக்கோள்களை பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு கொண்டு வந்து, அவற்றை அழிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் ஆராய்ச்சியில் உள்ளது. காலநிலை மாற்றங்களை இன்னும் துல்லியமாக அறிய முன்னேற்றம் தேவைப்படுகிறது. சாதாரண மக்களுக்கும் பயன்பெறும் வகையில், இஸ்ரோவின் செயல்பாடு அமையும்.

சந்திரயான்-3 வெற்றி பெறுவதற்கு இலக்கை நிா்ணயித்து, அதை அடைவதற்காக அா்ப்பணிப்பு உணா்வோடு தொடா் முயற்சி செய்தோம் என்றாா் அவா்.

முடிவில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் புத்தகங்களை வீரமுத்துவேல் வழங்கினாா். இதில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் அறிவியல் பாடத்தில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகள் 1000-க்கும் மேற்பட்டோா், ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com