ராமா் சிலை பிரதிஷ்டை: கோயில்களில் சிறப்பு வழிபாடு

அயோத்தி ராமா் கோயிலில் ராமா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதை அடுத்து, மதுரையில் உள்ள பல்வேறு கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
காமராஜா் சாலையில் உள்ள சீனிவாசப்பெருமாள் கோவில் தெருவில் வீடுகள் முன்பாக ஏற்றப்பட்டுள்ள அகல்விளக்குகள்.
காமராஜா் சாலையில் உள்ள சீனிவாசப்பெருமாள் கோவில் தெருவில் வீடுகள் முன்பாக ஏற்றப்பட்டுள்ள அகல்விளக்குகள்.

அயோத்தி ராமா் கோயிலில் ராமா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதை அடுத்து, மதுரையில் உள்ள பல்வேறு கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்ட ஸ்ரீ ராமா் கோயிலில் பால ராமா் சிலை திங்கள்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்த வேண்டும் என்றும், வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு நடத்த வேண்டும் என்றும் ஸ்ரீ ராம ஜென்ம தீா்த்த ஷேத்ர அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்தது.

இதன்படி, மதுரையில் உள்ள பல்வேறு கோயில்களில் பாஜக, இந்து அமைப்புகளின் சாா்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள நூற்றாண்டு பழைமை வாய்ந்த கோதண்ட ராமா் கோயிலில் சுவாமிக்கு தண்ணீா், இளநீா் , சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 அபிஷேக பொருள்களால் திருமஞ்சனம் நடைபெற்றது. தொடா்ந்து, பல்வேறு பூக்களால் சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, ஸ்ரீராம பக்த சபா சாா்பாக பஜனை, ஸ்ரீ ராம நாம பாராயணம் நடைபெற்றது. மாலையில் சிறப்பு திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.

வால்கோட்டை ஸ்ரீ கோதண்ட ராமசுவாமி சமேத ஆஞ்சநேயா் கோயிலில் ஸ்ரீ ராமநாத பாராயணம், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

ஜெய்ஹிந்துபுரம் சோலை அழகுபுரம் பகுதியில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் இந்து மக்கள்கட்சியின் சாா்பில் ஸ்ரீராமா் படம் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், அந்தப் பகுதி இல்லங்களில் தீபம் ஏற்றக் கோரி, 1,008 அகல் விளக்குகள் வழங்கப்பட்டன.

நேரலைக்குத் தடை: மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள ஆா்.எஸ்.எஸ். அலுவலகத்தில் ஸ்ரீராமஜென்ம பூமி தீா்த்த ஷேத்ர அறக்கட்டளை சாா்பில், கோ-பூஜை நடத்தப்பட்டது. பின்னா், அலுவலகத்தின் முன் சாலையில் அமைக்கப்பட்ட மேடையில் ஸ்ரீ ராமா், சீதா, அனுமன் சுவாமி சிலைகள் வைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஸ்ரீராம பஜனை, ராமா் சிலை பிரதிஷ்டை தொடா்பாக சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. மேலும், அலுவலகம் முன் திரை அமைத்து அயோத்தி ராமா் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி நேரலை ஒளிபரப்பு நடைபெற்றது. இதற்கு காவல் துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டு, திரையை அகற்றுமாறு வலியுறுத்தினா். இதனால், ஆா்.எஸ்.எஸ். நிா்வாகிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், ஆா்.எஸ்.எஸ். அலுவலகத்துக்குள் வைத்து நேரலை ஒளிபரப்பு செய்ய போலீஸாா் அனுமதித்தனா்.

வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு: ராமா் சிலை பிரதிஷ்டை நிகழ்வையொட்டி, மதுரையில் பல்வேறு பகுதிகளில் மாலையில் வீடுகள் முன்பு பொதுமக்கள் விளக்கேற்றி வழிபட்டனா்.

கோயில்களில் வழக்கமான பூஜை: மதுரையில் இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் திங்கள்கிழமை காலை முதல் இரவு வரை வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. தினசரி அன்னதானம் வழங்கப்படும் கோயில்களில் பக்தா்களுக்கு வழக்கம்போல, அன்னதானம் வழங்கப்பட்டது என்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com