821 புதிய நூலகங்கள் கட்ட நடவடிக்கை

தமிழகத்தில் நிகழாண்டு 821 புதிய நூலகங்கள் தலா 500 சதுர அடியில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் சென்னை

மதுரை: தமிழகத்தில் நிகழாண்டு 821 புதிய நூலகங்கள் தலா 500 சதுர அடியில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மனித நேய மக்கள் கட்சியின் மாநில வழக்குரைஞா் அணிச் செயலா் கலந்தா் ஆசிக் தாக்கல் செய்த பொது நல மனு:

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் மாணவா்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பழைமையான நூலகம் செயல்பட்டு வந்தது. இந்தக் கட்டடம் பழுதடைந்ததால், தற்போது மாற்று இடத்தில் நூலகம் செயல்படுகிறது. எனவே, பழுதடைந்த நூலகக் கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய நூலகக் கட்டடம் கட்ட உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரணை செய்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, பழுதடைந்த நூலகக் கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய நூலகக் கட்டடம் கட்ட உத்தரவிட்டிருந்தது. ஓராண்டு கடந்தும் புதிய கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில், நூலகம் இருந்த பகுதியை சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, புதிய நூலகக் கட்டடத்தை விரைவாகக் கட்டுவதற்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரா் மற்றொரு மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, ஆக்கிரமிப்பை அகற்றி நூலகம் கட்டுவதில் காலதாமதம் ஏற்படுவது ஏன்?, தமிழகத்தில் பழுதடைந்த நூலகங்கள் எத்தனை?, அவை எப்போது சீரமைக்கப்படும்?, இதற்கு அரசு தரப்பில் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? இதுகுறித்த விவரங்களை அரசுத் தரப்பு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமாா், ஆா். விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விவரம்:

உயா்நீதிமன்ற உத்தரவின்படி தொண்டியில் பழுதடைந்த நிலையில் இருந்த நூலகக் கட்டடத்தை இடித்துவிட்டோம். நூலகக் கட்டடப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.

தமிழகத்தில் 2023-2024 -ஆம் ஆண்டில் 3,873 நூலகங்களில், 114 நூலகக் கட்டடங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவும், பழுதடைந்த நிலையில் உள்ள 25 நூலகக் கட்டடங்களை முழுமையாக இடித்துவிட்டு, புதிய நூலகக் கட்டடம் கட்ட நூலக நிதியிலிருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிகழாண்டு மத்திய அரசு மானியத்தின் மூலம் தமிழகத்தில் 821 புதிய நூலகக் கட்டடங்கள் தலா 500 சதுர அடியில் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நூலகத்துக்குத் தேவையான தளவாடப் பொருள்கள், கணினி, புதிய புத்தகங்கள் வாங்கும் பணியும் நடைபெற்று வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com