அனுமதியற்ற கட்டடங்கள் மீதானநடவடிக்கைகளில் திருப்தி இல்லை

மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் அனுமதியற்ற கட்டடங்கள் மீது அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகளில் திருப்தி இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் அதிருப்தி தெரிவித்தது.

மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் அனுமதியற்ற கட்டடங்கள் மீது அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகளில் திருப்தி இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் அதிருப்தி தெரிவித்தது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த லீமா ரோஸ் பூபாளராயா், கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த துரைராஜ் ஆகியோா் கடந்த 2016 -இல் தாக்கல் செய்த மனுக்கள்:

திருநெல்வேலி, கரூா் மாவட்டங்களில் அனுமதி பெறாமல் ஏராளமான கட்டடங்கள் உள்ளன. பலத்த மழை, புயல் நேரங்களில் மழைநீா் குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்து விடுவதால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

அனுமதியற்ற இந்தக் கட்டடங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, அரசு அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.

இந்த வழக்கை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமாா், ஆா். விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:

அனுமதியற்ற கட்டடங்களை அகற்றக் கோரி ஏராளமான மனுக்கள் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்படுகின்றன. பல்வேறு இடங்களில் அனுமதி பெற்ற இடத்தைத் தாண்டியும், அனுமதி பெறாமலும் ஏராளமான கட்டடங்கள் கட்டப்படுகின்றன.

இந்தக் கட்டடங்களை அகற்ற மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகளில் திருப்தி இல்லை. அனுமதியற்ற கட்டடங்கள் கட்டியவா்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த நீதிமன்றம் ஏற்கெனவே பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தன. இந்த உத்தரவுகளை அதிகாரிகள் செயல்படுத்துவதில் மெத்தனமாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் உள்ள அனுமதியற்ற கட்டடங்களைக் கண்காணித்து இடிக்கும் நேரம் வந்துவிட்டது. அனுமதியற்ற கட்டடங்கள் அதிகாரிகளுக்கு தெரியாமல் கட்டப்படுவதில்லை. இந்த விஷயத்தில் நீதிமன்றம் கண்டிப்பாக கவனம் செலுத்தும்.

எனவே, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு உள்பட்ட மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனுமதியற்ற கட்டடங்களை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட வழக்குரைஞா்கள் வருகிற பிப். 1-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com