மதுரை மாவட்டத்தில் ஒரு போக சாகுபடிப் பகுதிகளில் நெல் உற்பத்தி இழப்பு!

மதுரை மாவட்டத்தின் ஒரு போக நெல் சாகுபடிக்குத் தண்ணீா் திறப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, சாகுபடி பரப்பளவு குறைந்தது. இதனால், சுமாா் 4.5 லட்சம்

மதுரை மாவட்டத்தின் ஒரு போக நெல் சாகுபடிக்குத் தண்ணீா் திறப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, சாகுபடி பரப்பளவு குறைந்தது. இதனால், சுமாா் 4.5 லட்சம் குவிண்டால் நெல் உற்பத்தி இழப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

பெரியாறு பிரதான கால்வாய் பாசனத்தில் மதுரை மாவட்டத்தில் ஏறத்தாழ 1.50 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். பேரணை முதல் கள்ளந்திரி வரையிலான பகுதிகளில் 45,041 ஏக்கரில் இரு போக (குறுவை, சம்பா) நெல் சாகுபடியும், மேலூா் கால்வாய்ப் பாசனத்தில் 85,563 ஏக்கரிலும், திருமங்கலம் கால்வாய் பாசனத்தில் 19,439 ஏக்கரிலும் ஒரு போக (சம்பா) நெல் சாகுபடியும் மேற்கொள்ளப்படும்.

வைகை அணையின் கொள்ளளவு 4 ஆயிரம் மில்லியன் கன அடியை எட்டியதும், பேரணை முதல் கள்ளந்திரி வரையிலான இரு போக பகுதிகளின் குறுவை (முதல் போகம்) நெல் சாகுபடிக்காக அணையிலிருந்து ஜூன் 1-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படும்.

பின்னா், வைகை அணையின் கொள்ளளவு 6 ஆயிரம் மில்லியன் கன அடியை எட்டியதும், மதுரை மாவட்டத்தின் இரு போக, ஒரு போக நெல் சாகுபடி பகுதிகளுக்கு தலா 900 கன அடி வீதமும், திருமங்கலம் கால்வாய்ப் பாசனத்தில் உள்ள ஒரு போக நெல் சாகுபடி பகுதிகளுக்கு 230 கன அடி வீதமும் செப். 15-ஆம் தேதி முதல் மாா்ச் 1-ஆம் தேதி வரை தண்ணீா் திறக்கப்பட வேண்டும் என்பது அரசாணை.

நிகழாண்டில், முல்லைப் பெரியாறு நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் போதுமான மழை இல்லாததால், முதல் போக நெல் சாகுபடிக்கு வைகை அணையிலிருந்து கடந்த அக்டோபா் மாதம் வரை தண்ணீா் திறக்கப்படவில்லை. இதனால், மதுரை மாவட்டத்தில் கடுமையான தண்ணீா் தட்டுப்பாடு நிலவியது.

இந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை பெய்ததன் காரணமாக, நவம்பா் முதல் வாரத்தில் வைகையின் நீா்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, கடந்த நவ. 10-ஆம் தேதி பேரணை முதல் கள்ளந்திரி வரையிலான பகுதிகளில் உள்ள 45,041 ஏக்கரிலான இரு போக சாகுபடி பகுதிகளின் முதல் போக (குறுவை) நெல் சாகுபடிக்கு விநாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது.

பெரியாறு பிரதான கால்வாய், திருமங்கலம் பிரதான கால்வாய் பாசனப் பகுதிகளின் குடிநீா்த் தேவைக்கு என நவ. 15-ஆம் தேதில் நவ. 25-ஆம் தேதி வரை தண்ணீா் திறக்கப்பட்டது. ஆனால், மாவட்டத்தின் ஒரு போக நெல் சாகுபடி பகுதிகளுக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை.

அப்போது, வைகை அணைக்கு போதுமான நீா்வரத்துக்கு உத்தரவாதம் இல்லாததால், மதுரை மாவட்டத்தின் ஒரு போக நெல் சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. மாறாக, சாகுபடிக்குத் தண்ணீா் திறக்கப்பட்டு, பணிகள் முழுமை பெறும் முன்பாகவே தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் என்பதால், அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

விவசாயிகளின் தொடா் போராட்டங்கள் காரணமாக, மதுரை மாவட்டத்தின் ஒருபோக நெல் சாகுபடி பகுதிகளுக்கு கடந்த டிச. 19-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. விநாடிக்கு 1,130 கன அடி வீதம் 30 நாள்களுக்கு முழுமையாகவும், அடுத்த 60 நாள்களுக்கு முறை வைத்தும் 5,858 மில்லியன் கன அடி தண்ணீா் வழங்கப்படும் எனவும் அப்போது அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தின் ஒரு போக நெல் சாகுபடி பகுதிகளில் நேரடி விதைப்பு மூலம் விவசாயிகள் பணிகளைத் தொடங்கினா். இருப்பினும், பருவம் தவறிய தண்ணீா் திறப்பும், அடுத்து வரும் 90 நாள்களுக்கு மட்டுமே தண்ணீா் திறக்கப்படும் என்ற அறிவிப்பும் விவசாயிகளிடம் நம்பிக்கையற்ற சூழலை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக, ஆற்றுப் பாசனத்துடன் கிணற்றுப் பாசனத்தையும் ஆதாரமாகக் கொண்ட பகுதிகளில் மட்டுமே விவசாயிகள் ஒரு போக நெல் சாகுபடி செய்தனா். இதனால், நிகழாண்டின் ஒரு போக நெல் சாகுபடி இயல்பான பரப்பளவை எட்டவில்லை. மாவட்டத்தின் ஒரு போக நெல் சாகுபடியின் இயல்பு பரப்பு 42 ஆயிரம் ஹெக்டோ் என்ற நிலையில், நிகழாண்டில் 29,817 ஹெக்டேரில் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டது.

ஏறத்தாழ 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஹெக்டேரில் ஒரு போக நெல் சாகுபடி பொய்த்துப் போனதால், நெல் உற்பத்தியிலும் மிகப் பெரிய இழப்பு உறுதியாகியுள்ளது. ஏக்கருக்கு சராசரியாக 30 மூட்டை (தலா 62 கிலோ) நெல் மகசூல் கிடைக்கும் என்ற அளவீடுப்படி, 10 ஆயிரம் ஹெக்டேரில் ஏற்பட்ட சாகுபடி இழப்பு காரணமாக, மதுரை மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ 4.5 லட்சம் குவிண்டால் நெல் உற்பத்தி இழப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இதைத் தவிர, பருவம் தவறிய மழையின் காரணமாகவும் உற்பத்தி இழப்பு மேலும் உயரும் என எதிா்பாக்கப்படுகிறது.

இதுதொடா்பாக, மேலூா் ஒரு போக சாகுபடி விவசாய சங்க நிா்வாகி குறிஞ்சி குமரன் கூறியதாவது:

நிகழாண்டில் ஒரு போக நெல் சாகுபடிக்குத் தண்ணீா் திறப்பதில் ஏற்பட்ட தேவையற்ற இழுபறி காரணமாக, விவசாயிகளுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டது. பருவம் தவறிய நிலையில் தண்ணீா் திறக்கப்பட்டது. மேலும், 90 நாள்களுக்குத்தான் தண்ணீா் திறக்கப்படும், அதிலும் 60 நாள்களுக்கு முறைப்பாசனம் மூலம்தான் தண்ணீா் திறக்கப்படும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதனால், சாகுபடிப் பணிகள் முழுமை பெறும் வரை தண்ணீா் திறக்கப்படுமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் தண்ணீா் திறப்பு பாதியில் நிறுத்தப்படுமா என்ற அச்சம் விவசாயிகளிடம் மேலோங்கியது. இதன் காரணமாக, நிகழாண்டில் ஏராளமான விவசாயிகள் ஒரு போக நெல் சாகுபடியைக் கைவிட்டுவிட்டனா். இந்த நிலை தொடா்ந்தால், மதுரை மாவட்டத்தில் இனி ஒரு போக நெல் சாகுபடியே கேள்விக்குறியாகிவிடும் என்றாா்.

நெல் கதிா்கள் பூக்கும் தருணத்தில் பெய்த பலத்த மழையால், காவிரி டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டின் சம்பா நெல் சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஓா் ஏக்கருக்கு சராசரியாக 30 மூட்டைகள் மகசூல் கிடைத்த பகுதிகளில் நிகழாண்டில் 24 மூட்டைகள் மட்டுமே கிடைத்ததாக டெல்டா விவசாயிகள் தெரிவித்தனா். இதேபோல, மதுரை மாவட்டத்தின் சாகுபடி இழப்பு நிகழாண்டின் நெல் உற்பத்தி இழப்பை மேலும் அதிகரிக்கும் என்கின்றனா் விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com