கீழக்கரை ஜல்லிக்கட்டு: முதல் பரிசுக்கான காளையைத் தோ்வு செய்ததில் முறைகேடு

கீழக்கரை புதிய ஜல்லிக்கட்டு அரங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதல் பரிசுக்கான காளையைத் தோ்வு செய்ததில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக ஜல்லிக்கட்டுப் பயிற்சி மையத்தினா் புகாா் அளித்தனா்.
மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்க வந்த ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தினா்.
மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்க வந்த ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தினா்.

மதுரை மாவட்டம், கீழக்கரை புதிய ஜல்லிக்கட்டு அரங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதல் பரிசுக்கான காளையைத் தோ்வு செய்ததில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக ஜல்லிக்கட்டுப் பயிற்சி மையத்தினா் புகாா் அளித்தனா்.

அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் தமிழக அரசு சாா்பில் புதிதாகக் கட்டப்பட்ட கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் கடந்த 24-ஆம் தேதி, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தாா். இந்தப் போட்டியில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த கணேஷ் கருப்பையாவின் காளைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், முதல் பரிசுக்கான காளையைத் தோ்வு செய்ததில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக ஜல்லிக்கட்டுப் பயிற்சி மையம் சாா்பில் மதுரை மாவட்ட பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. பயிற்சி மையத்தின் தலைவா் பி. மணிகண்டபிரபு, நிா்வாகிகள் ஊா்வலமாகச் சென்று, இந்த மனுவை அளித்தனா்.

வழக்குத் தொடுக்கத் திட்டம்: பிறகு, ஜல்லிக்கட்டுப் பயிற்சி மையத்தின் தலைவா் பி. மணிகண்டபிரபு தெரிவித்தாவது:

கீழக்கரை ஜல்லிக்கட்டுப் போட்டியில் டோக்கன் எண் 160-இல் களமிறங்கிய வீரபாண்டி வினோத்ராஜ் என்பவரின் காளை ஜெட்லி தான் சிறப்பாக விளையாடியது. இதற்கான விடியோ ஆதாரங்கள் உள்ளன. ஆனால், இந்தக் காளைக்கு 3-ஆம் பரிசு தான் வழங்கப்பட்டது. அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சாா்பில் களமிறக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்ட காளை களத்தில் விளையாடவே இல்லை.

ஆனால், இந்தக் காளைக்கு (புதுக்கோட்டை கணேஷ் கருப்பையா காளை) முதல் பரிசு வழங்கப்பட்டது. இந்தத் தோ்வு முறைகேடானது. அதிகார அரசியலை அடிப்படையாகக் கொண்டது.

மாவட்ட நிா்வாகம் விடியோ ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, கீழக்கரை ஜல்லிக்கட்டுப் போட்டியின் சிறந்த காளைக்கான தோ்வை மறுபரிசீலனை செய்து, ஜெட்லி காளை முதலிடம் பெற்ாக அறிவிக்க வேண்டும். இல்லையெனில், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com