கைதிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரம்:ஐஏஎஸ் அதிகாரியின் விசாரணை அறிக்கையைமனுதாரருக்கு வழங்க உத்தரவு

ஐபிஎஸ் அதிகாரி பல்வீா் சிங் பிடுங்கிய விவகாரத்தில், ஐஏஎஸ் அதிகாரியின் விசாரணை அறிக்கையை மனுதாரருக்கு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கைதிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரம்:ஐஏஎஸ் அதிகாரியின் விசாரணை அறிக்கையைமனுதாரருக்கு வழங்க உத்தரவு

விசாரணைக் கைதிகளின் பற்களை ஐபிஎஸ் அதிகாரி பல்வீா் சிங் பிடுங்கிய விவகாரத்தில், ஐஏஎஸ் அதிகாரியின் விசாரணை அறிக்கையை மனுதாரருக்கு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் தாக்கல் செய்த மனு:

அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் என் மீது பொய் வழக்குப் பதிவு செய்து, சட்டவிரோதக் காவலில் வைத்து போலீஸாா் கடுமையாகத் தாக்கினா். அப்போது, என்னுடைய 4 பற்கள் உடைக்கப்பட்டன. இதில் நான் மட்டுமன்றி, விசாரணைக் கைதிகள் சிலரது பற்களையும் ஐபிஎஸ் அதிகாரியான பல்வீா் சிங் பிடுங்கி துன்புறுத்தினாா்.

அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு, மாா்ச் 10-ஆம் தேதி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை எனக்கு வழங்க வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி அமுதா, திருநெல்வேலி சாா் ஆட்சியா் ஆகியோரது அறிக்கைகளை எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி ஜி. இளங்கோவன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் முன்னிலையான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் வீரா கதிரவன் முன்வைத்த வாதம்:

இந்த வழக்கு விவகாரம் தொடா்பாக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணை மேற்கொண்டாா். இதுதொடா்பான அறிக்கை, கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா தொடா்பான அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றாா்.

இதற்கு மனுதாரா் தரப்பில் முன்னிலையான மூத்த வழக்குரைஞா் ஹென்றி முன்வைத்த வாதம்:

இந்த வழக்கு விசாரணையின் போது சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஐஏஎஸ் அதிகாரி அமுதாவின் அறிக்கையை சமா்பிப்பதாக அரசுத் தரப்பில் ஏற்கெனவே உத்தரவாதம் அளிக்கப்பட்டது. எனவே, அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் வழங்க வேண்டும் என்றாா்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி அமுதாவின் அறிக்கையை மனுதாரருக்கு வழங்க வேண்டும். இந்த வழக்கில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை வழங்குவது தொடா்பாக உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com