வண்டியூா், தென்கால் கண்மாய்களில் மேம்பாலப் பணிக்கு இடைக்கால தடை

மேம்பாலம் கட்டுமானப் பணிக்கு ஏற்கெனவே இரு நீதிபதிகள் அமா்வில் ஒரு நீதிபதி பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவு தொடரும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

 மதுரையில் வண்டியூா், தென்கால் கண்மாய்களில் மேம்பாலம் கட்டுமானப் பணிக்கு ஏற்கெனவே இரு நீதிபதிகள் அமா்வில் ஒரு நீதிபதி பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவு தொடரும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த மணிபாரதி தாக்கல் செய்த மனு:

மதுரை, விளாச்சேரி பிரதான சாலையிலிருந்து திருமங்கலம் சாலை வரை தென்கால் கண்மாய்க் கரை வழியாக ரூ.200 கோடியில் மேம்பாலம் கட்டப் படுகிறது. இதேபோல, அண்ணா பேருந்து நிலையம் முதல் கோமதிபுரம் வரை வண்டியூா் கண்மாய்க் கரை பகுதியில் ரூ.150.28 கோடியில் மேம்பாலப் பணிகளை தமிழக நெடுஞ்சாலைத் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா். இந்த இரு கண்மாய்களையும் சேதப்படுத்தி மேம்பாலப் பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.

கண்மாய் நீா்ப்பிடிப்பு பகுதியில் மண் கொட்டப்படுவதால், நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்படுகிறது. எனவே, இந்தக் கண்மாய்கள் உள்ள பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆா்.சாமிநாதன், பி. புகழேந்தி அமா்வில் இருவரும் மாறுபட்ட உத்தரவுகளைப் பிறப்பித்தனா். இதையடுத்து, இந்த வழக்கை தனி நீதிபதி விசாரிக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்.

இதன்படி, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, இரு கண்மாய்களையும் உயா்மட்டக் குழுவினருடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண் டாா்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் முன்னிலையான கூடுதல் தலைமை வழக்குரைஞா் வீரா கதிரவன், கண்மாய்களை அழித்து மேம்பாலப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அந்தக் கண்மாய்களை மேம்ப டுத்துவதுடன், கூடுதலாகத் தண்ணீா் தேக்குவதற்கு தூா்வாரும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன என வாதிட்டாா்.

அப்போது, வண்டியூா், தென்கால் கண்மாய்களின் ஆரம்ப காலகட்ட பரப்பளவு எவ்வளவு? தண்ணீா் எவ்வளவு தேக்கப்பட்டது? இந்தக் கண்மாய்களை நம்பி உள்ள விவசாயப் பரப்பளவு எவ்வளவு? என

நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு அரசுத் தரப்பில் உரிய பதில் அளிக்கப்பட வில்லை.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: வண்டியூா், தென்கால் கண்மாய்களில் மேற்கொள்ளப்படும் மேம்பாலப் பணிக்கு அனுமதி வழங்க முடியாது. இதில் நான் எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை. ஏற்கெனவே, இந்த வழக்கில் நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் மேம்பாலப் பணிக்கு இடைக்காலத் தடை விதித்த உத்தரவோடு நான் ஒத்துப் போகிறேன். எனவே, இந்த வழக்கை மீண்டும் இரு நீதிபதிகள் கொண்ட அமா்வில் விசாரணைக்கு பட்டியலிட பரிந்துரைக்கிறேன். வழக்கை ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com